அமித் ஷா மத்திய அமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டதையடுத்து அவர் வகித்து வந்த பாஜக தேசியத் தலைவர் பதவிக்கு மூத்த தலைவர் ஜே.பி.நட்டா நியமிக்கப்படலாம் எனத் தெரிகிறது.
பாஜகவில் ஒருவருக்கு ஒரு பதவி என்ற முறை பின்பற்றப்பட்டு வருவதால், மத்திய அமைச்சர் பதவி ஏற்ற நிலையில், அமித் ஷா கட்சித் தலைவர் பதவியை விரைவில் ராஜினாமா செய்ய உள்ளார். அவருக்குபின் ஜே.பி நட்டா அந்த பொறுப்பில் நியமிக்கப்படலாம் எனத் தெரிகிறது.
அதனால்தான் ஜே.பி.நட்டா மத்திய அமைச்சரவையில் சேர்க்கப்படவில்லை. கடந்த மோடி அரசியல் சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சராக இருந்த நட்டா இந்த முறை அமைச்சரவையில் இல்லை.
இமாச்சலப்பிரதேசத்தின் பிராமணக் குடும்பத்தில் பிறந்த ஜே.டி நட்டா, பாஜக மூத்த தலைவர்களின் அன்பையும், மரியாதையையும், நம்பிக்கையையும் பெற்றவர். குறிப்பாக ஆர்எஸ்எஸ் அமைப்பின் நம்பிக்கையை ஜே.பி.நட்டா பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
56வயதான ஜே.பி. நட்டா இமாச்சலப்பிரதேச பாஜக அரசிலும் அமைச்சராவக இருந்தவர், கட்சியின் ஆட்சிமன்றக் குழுவிலும் உறுப்பினராக இருந்து வருகிறார். எந்தவிதமான சிறிய விமர்சனத்துக்கும் உள்ளாகாதவர் என்பதால் இந்த பதவிக்கு நட்டா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மேலும், பாஜக தலைவர் பதவியை நட்டாவுக்கு வழங்கினால் சிறப்பாகச் செய்வார் என்று கட்சியின் ஆட்சிமன்றக்குழுவில் உள்ள பெரும்பாலான உறுப்பினர்கள் விருப்பம் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதுதவிர பாஜக பொதுச்செயலாளர் பூபேந்திர யாதவ் மற்றும் துணை துணைத்தலைவர் ஓ.பி. மாத்தூர் ஆகியோரும் பாஜக தலைவர்பதவிக்கான பெயர்களில் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
உ.பி. பாஜக தலைவர் மகேந்திர நாத் பாண்டே, பிஹார் மாநில பாஜக தலைவர் நித்யானந்த் ராய் ஆகியோர் மத்திய அமைச்சராக பதவி ஏற்றதால், இருவருக்கு பதிலாக புதிய தலைவர்கள் நியமிக்கவும் பாஜக தலைமையிடம் ஆலோசித்து வருகிறது.