இந்தியா

துரியோதனனுக்கும் இதே அகங்காரம் இருந்தது: மோடியைக் கடுமையாகச் சாடிய பிரியங்கா

பிடிஐ

மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தில் அரசியல் தலைவர்கள் ஒருவரையொருவர் தாக்கிப் பேசிவரும் நிலையில், காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, மகாபாரதத்தில் வரும் துரியோதனனுக்கும் இதே அகங்காரம் இருந்தது என்று மோடியைச் சாடியுள்ளார்.

அம்பாலாவில் இன்று காங்கிரஸ் வேட்பாளர் குமாரி செல்ஜாவை ஆதரித்துப் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய பிரியங்கா காந்தி, "மக்களவைத் தேர்தலில் வளர்ச்சி குறித்துப் பேசுங்கள், மாறாக மக்களின் கவனத்தைத் திசை திருப்ப முயற்சிக்காதீர்கள். இத்தகைய ஈகோவையும் அகங்காரத்தையும் தேசம் என்றுமே மன்னிக்காது. இதற்கு வரலாறு ஓர் அடையாளம். மகாபாரதம் ஓர் உதாரணம்.

துரியோதனனுக்கும் இதே அளவில்தான் அகங்காரம் இருந்தது. கிருஷ்ணர் சென்று இதைப் புரியவைக்க முயற்சித்தபோது, துரியோதனன் கிருஷ்ணரையே வசப்படுத்தப் பார்த்தார்.

உங்களுக்குத் தைரியம் இருந்தால் வளர்ச்சி, வேலைவாய்ப்பு, விவசாயிகள் மற்றும் பெண்கள் நலன் ஆகியவற்றில் உள்ள பிரச்சினைகளுக்கு எதிராகப் போராடுங்கள். கடந்த 5 ஆண்டுகளில் என்ன செய்தீர்கள், வருங்காலத்தில் என்ன செய்யப் போகிறீர்கள் என்று மக்களைச் சந்தித்துப் பேசுங்கள்.

நீங்கள் ஒரு பிரதமர், பாஜகவின் மாபெரும் தலைவர். இதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். இல்லையெனில் மக்கள் உங்களுக்குப் பாடம் கற்பிப்பார்கள். இந்த தேசத்தின் மக்கள் புத்திசாலிகள். அவர்களை நீங்கள் திசைதிருப்பமுடியாது. அவர்களுக்கு நீங்கள் பதில் சொல்லித்தான் தீர வேண்டும்.

பாஜக தலைவர்கள் பிரச்சாரத்துக்காகச் செல்லும்போது அவர்கள் பிரச்சினைகளைப் பற்றிப் பேசுவதில்லை. மற்ற விவகாரங்களைத்தான் எழுப்புகிறார்கள். சில சமயம் யானை 70 ஆண்டுகள் உறங்கும் என்கிறார்கள், சில நேரங்களில் தியாகிகளின் பேரைப் பயன்படுத்தி ஓட்டு கேட்கிறார்கள். இன்னும் சில சமயங்களில் தன்னுடைய வாழ்க்கையையே தியாகம் செய்த என் குடும்பத்தினரை இழிவுபடுத்துகிறார்கள்.

இந்தத் தேர்தல் ஒரு குடும்பத்துக்கானதல்ல. கோடிக்கணக்கான குடும்பங்களின் நம்பிக்கைகளையும் ஆசைகளையும் முழுமையாக அழித்த இந்த அரசாங்கம் மற்றும் பிரதமருக்கானது" என்றார் பிரியங்கா காந்தி.

உத்தரப் பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை அன்று பிரதமர் மோடி பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது, "ராகுல் காந்தியின் தந்தை நேர்மையானவர், மிஸ்டர் கிளீன் என காங்கிரஸால் சித்தரிக்கப்பட்டவர், ஆனால் கடைசியில் அவரது வாழ்க்கை நம்பர்-1 ஊழல்வாதியாகத்தான் முடிவடைந்தது" எனக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT