59 தொகுதிகளில் நாளை 7-ம் கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் ரவிசங்கர் பிரசாத், ஹர்சிம்ரத் கவுர் உள்ளிட்ட முக்கிய நபர்கள் போட்டியிடும் தொகுதிகளில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
நாடாளுமன்ற மக்களவையில் உள்ள 543 இடங்களுக்கு ஏப்ரல் 11 முதல் மே 19 வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்றும் வாக்கு எண்ணிக்கை மே 23-ல் நடைபெறும் என்றும் தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்தது.
அதன்படி, 6 கட்ட தேர்தல் ஏற்கெனவே நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் 7-வது மற்றும் இறுதி கட்டமாக, பிஹார் (8), இமாச்சலபிரதேசம் (4), ஜார்க்கண்ட் (3), மத்தியபிரதேசம் (8), பஞ்சாப் (13), உத்தரபிரதேசம் (13), மேற்குவங்கம் (9) மற்றும் சண்டிகர் (1) ஆகிய 7 மாநிலங்கள் மற்றும் 1 யூனியன் பிரதேசத்துக்குட்பட்ட 59 மக்களவை தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
50 தொகுதிகளில் நேற்று மாலையுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. மேற்குவங்கத்தில் வன்முறை காரணமாக 9 தொகுதிகளில் தேர்தல் ஆணையத்தின் உத்தரவுபடி நேற்று முன்தினமே பிரச்சாரம் முடிந்தது. இறுதிகட்ட தேர்தலில் மொத்தம் 918 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
பிரதமர் மோடி
உத்தரபிரதேசத்தின் வாரணாசி மக்களவைத் தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் போட்டியிடுகிறார். இத்தொகுதியில் காங்கிரஸ் சார்பில் முன்னாள் எம்எல்ஏவான அஜய்ராய் போட்டியிடுகிறார்.
2014 தேர்தலிலும் மோடியை எதிர்த்து போட்டியிட்ட ராய், வெறும் 75,614 வாக்குகள் பெற்றிருந்தார். இவருடன் ஆம் ஆத்மி சார்பில் போட்டியிட்ட அக்கட்சியின் தேசிய அமைப்பாளரான அர்விந்த் கேஜ்ரிவால், சுமார் 2 லட்சம் வாக்குகளுடன் இரண்டாம் இடம் வகித்திருந்தார். இங்கு வெற்றி பெற்ற மோடிக்கு 5.81 லட்சம் வாக்குகள் கிடைத்திருந்தன. பிரதமர் மோடி 371,785 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். சமாஜ்வாதி, பகுஜன்சமாஜ் கூட்டணி சார்பில் ஷாலினி யாதவ் போட்டியிடுகிறார்.
வாரணாசி தொகுதியில் 2-வது முறையாக களம் இறங்கியுள்ள பிரதமர் மோடி கடந்த மாதம் 25-ந் தேதி அங்கு வேட்பு மனு தாக்கல் செய்தார். அப்போது அவர் வாரணாசியில் சுமார் 3 லட்சம் பேர் கலந்துகொண்ட மிகப்பிரமாண்ட பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டார். அதன்பிறகு மோடி 2 தடவை வாரணாசி சென்று தனக்கு ஆதரவு திரட்டினார்.
மற்ற வேட்பாளர்கள்
மக்களவை முன்னாள் சபாநாயகர் மீரா குமார் (சசாராம்-பிஹார்)
அகாலிதளம் தலைவர் சுக்பிர் சிங் பாதல் (பெரோஸ்பூர்-பஞ்சாப்)
மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் (பதிண்டா-பஞ்சாப்)
பாஜக வேட்பாளர் நடிகர் சன்னி தியோல் (குர்தாஸ்பூர்)
காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மணீஷ் திவாரி (அனந்த்பூர் சாஹிப்)
ஜோதிராதித்ய சிந்தியா (குணா-ம.பி.)
லாலு பிரசாத் மகள் மிஸா பாரதி (பாடலிபுத்ரா)
மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் (பாட்னா சாஹிப்)
வாக்குப்பதிவையொட்டி அனைத்து வாக்குச்சாவடி மையங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு தேர்தல் அதிகாரிகள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், விவிபாட் கருவிகளுடன் சென்று சேர்ந்துள்ளனர். பதற்றமான, அதிக பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் போலீஸார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.