இந்தியா

ஆம் ஆத்மியிலிருந்து விலகுகிறார் குமார் விஸ்வாஸ்? - பிரதமர் நரேந்திர மோடியை பாராட்டி பேசியதால் சர்ச்சை

செய்திப்பிரிவு

ஆம் ஆத்மி கட்சியின் நிறுவனர்களில் ஒருவரும் அதன் தேசிய அமைப்பாளர் அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு நெருக்கமானவருமான குமார் விஸ்வாஸ், கட்சியிலிருந்து விலக இருப்பதாகக் கூறப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடியை அவர் பாராட்டி பேசியதால் இதுபற்றிய சர்ச்சை கிளம்பியுள்ளது. குமார் விஸ்வாஸ் ஒரு செய்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

நரேந்திர மோடிக்கு நான் வாக்களிக்கவில்லை என்றாலும் அவர் எனக்கும் பிரதமரே. அவர் நன்றாக ஆட்சி செய்தால் பாராட்டவும் சரியாக ஆட்சி செய்யாவிட்டால் விமர்சிக்கவும் எனக்கு உரிமை உள்ளது. மன்மோகன் சிங்குடன் ஒப்பிடும்போது மோடி சிறந்த பிரதமர்.

வரும் 17-ம் தேதி மோடியின் பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்ள குஜராத் செல்லும் திட்டத்தைக் கைவிடவில்லை. இந்த காரணத்துக்காக கட்சி தன்னை வெளியேற்றினாலும் கவலை இல்லை என்று அவர் கூறியுள்ளார்.

இதனால், குமார் விஸ்வாஸ் ஆம் ஆத்மியை விட்டு வெளியேறி, பாஜகவில் சேர இருப்பதாக சர்ச்சை கிளம்பியுள்ளது. இதுகுறித்து குமார் தரப்பிலோ அவரது கட்சியின் சார்பிலோ எந்தவிதமான மறுப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஹிந்தி மொழி கவிஞரான குமார் விஸ்வாஸ், நடந்து முடிந்த மக்களவைத் தேர்லில் உபியின் அமேதி தொகுதியில் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தியை எதிர்த்து போட்டியிட்டு தோல்வி அடைந்தவர். 49 நாள் ஆட்சிக்கு பிறகு டெல்லி முதல்வர் பதவியை அர்விந்த் கேஜ்ரிவால் ராஜினாமா செய்தது தவறு எனவும், அது பற்றி முன்கூட்டியே கட்சியில் விவாதிக்கவில்லை எனவும் விஸ்வாஸ் கருத்து கூறியிருந்தார்.

இப்போது டெல்லியில் ஆட்சி அமைக்க முயன்று வரும் பாஜகவை கேஜ்ரிவால் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், குமார் விஸ்வாஸின் இந்தக் கருத்து ஆம் ஆத்மி கட்சியினரை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. ஏற்கனவே, ஆம் ஆத்மி கட்சியிலிருந்து அதன் முக்கிய தலைவர்களான ஷாஜியா இல்மி, கேப்டன் கோபிநாத் உட்பட பலரும் வெளியேறினர்.

SCROLL FOR NEXT