நீதித்துறை சுதந்திரத்தை பறிக்கும் முயற்சிகள் பலிக்காது என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா தெரிவித்துள்ளார்.
மேலும், நீதித்துறைக்கு இயற்கையாகவே பலம்வாய்ந்தது. எனவே பலம் பொருந்திய நீதித்துறை சுதந்திரத்தை பறிப்பது சாத்தியமல்ல என்று அவர் கூறியுள்ளார்.
ஊழல் நோய் ஒழிக்கப்பட வேண்டும்:
டெல்லியில் சட்டம் சார்த கருத்தரங்கு ஒன்றில் நீதித்துறை நிலை குறித்து கருத்து வெளியிட்ட அவர், "ஜனநாயகத்தை அச்சுறுத்தும் மிகப்பெரிய நோய் ஊழல்தான். ஊழலை நீதித்துறைக்குள் அனுமதிக்கக் கூடாது.
சட்டவிரோத செயல்களில் ஈடுபட சில சக்திகள் தூண்டலாம், ஆனால் நீதிபதிகள் அத்தகைய சக்திகளை அடையாளம் கண்டு விலகி இருக்க வேண்டும்.
சிலர் தந்திரமாக தாங்கள் விரித்த வலையில் நீதிபதிகளை விழவைக்க முயற்சிக்கலாம். எந்த வகையிலும் ஊழலுகு வழிவிடாதீர்கள். நீதித்துறையில் ஊழல் முற்றிலுமாக ஒழிக்கப்படுவதை நாம் உறுதி செய்ய வேண்டும்.
நீதித்துறை சுதந்திரம் மக்கள் மனதில் நம்பிக்கையை வளர்க்கும். தங்களுக்கு அநீதி ஏற்பட்டால் நீதித்துறை தங்களுக்கு நியாயம் கிடைக்க கைகொடுக்கும் என்பதை மக்கள் நம்பும் நிலையை உருவாக்க வேண்டும்” என்றார் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா.