இந்தியா

நடந்தது நடந்துவிட்டது- சீக்கியப் படுகொலை குறித்த சாம் பித்ரோடா கருத்தால் சர்ச்சை

செய்திப்பிரிவு

நடந்தது நடந்துவிட்டது என்று சீக்கியப் படுகொலை குறித்துக் கூறிய காங்கிரஸ் அயல்நாட்டுத் தலைமை சாம் பித்ரோடா கருத்தால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

1984-ல் சீக்கியர்களைக் கொல்லச்சொல்லி பிரதமர் அலுவலகத்தில் இருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக பாஜக நேற்று குற்றம் சாட்டியது. இதுகுறித்து அக்கட்சியின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில், ''1984-ல் சீக்கியர்களுக்கு எதிராக நடைபெற்ற கலவரங்கள் குறித்து விசாரித்த நானாவதி கமிஷனில் சில தகவல்கள் கூறப்பட்டுள்ளன. அரசே தனது சொந்த மக்களைக் கொன்று குவித்த மிகப்பெரிய இனப் படுகொலையில், பிரதமர் ராஜீவ் காந்தியின் அலுவலகத்தில் இருந்து உத்தரவுகள் நேரடியாகப் பிறப்பிக்கப்பட்டன.

இதற்கான வினைப்பயனைத் தீர்க்கவும் நீதி கிடைக்கவும் தேசமே காத்திருக்கிறது'' என்று தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸின் சாம் பித்ரோடா, ''இதுவும் அவர்களின் மற்றொரு பொய். 1984-ல் நடந்தது குறித்து இப்போது என்ன கவலை? கடந்த 5 ஆண்டுகளில் என்ன செய்தீர்களோ அதைப் பற்றிப் பேசுங்கள். 1984-ல் என்ன நடந்ததோ, நடந்துவிட்டது.

நீங்கள் வேலைவாய்ப்புகளை உருவாக்குவீர்கள் என்று மக்கள் ஓட்டு போட்டனர். 200 ஸ்மார்ட் சிட்டிகள் உருவாக்கப்படும் என்று கூறி வாக்குகளைப் பெற்றீர்கள்.  ஆனால் எதையுமே நீங்கள் செய்யவில்லை. அதனால்தான் இங்குமங்கும் பேசிக் கொண்டிருக்கிறீர்கள்'' என்றார் பித்ரோடா.

இதற்கிடையே சீக்கியர்கள் படுகொலை குறித்து நடந்தது நடந்துவிட்டது என்ற பித்ரோடாவின் வார்த்தைகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. இதற்கு பாஜக தலைவர்கள் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

1984-ல் தன்னுடைய சீக்கிய பாதுகாவலர்களாலேயே அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டார். இதைத் தொடர்ந்து ஏற்பட்ட இனப்படுகொலையில் சுமார் 3 ஆயிரம் சீக்கியர்கள் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT