இந்தியா

தலித் பெண்ணுக்கு நடந்த பாலியல் வன்கொடுமை; கேள்வி கேட்டவர்கள் அமைதியாக இருப்பது ஏன்?- பிரதமர் மோடி கேள்வி

செய்திப்பிரிவு

ராஜஸ்தானில் தலித் சமூக பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவத்தை சுட்டிக்காட்டி பேசிய பிரதமர் மோடி காங்கிரஸைச் சேர்ந்த அசோக் கெலாட் ஆட்சி செய்யும் அந்த மாநிலத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்து விட்டதாக குற்றம்சாட்டினார்.  

ராஜஸ்தான் மாநிலம் அல்வார் பகுதியில் ஏப்ரல் மாதம் 26-ம் தேதி தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, அவர்களை ஒரு கும்பல் இரண்டு பைக்குகளில் விரட்டி வந்துள்ளது. அவர்களை வழிமறித்த மறைவிடத்துக்கு தூக்கிச் சென்ற கும்பல் கணவரை தாக்கியது.

அந்த கும்பல் ஒன்று அவரது கண்முன்னே அவரது மனைவியை கூட்டாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளது.  சம்பவம் குறித்து புகார் அளித்தும் கண்டுகொள்ளாத காவல்துறை, 7-ம் தேதி வழக்கு பதிவு செய்து, 6 பேரை கைது செய்தது. இதற்கு மாயாவதி உள்ளிட்ட தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில் உத்தர பிரதேச மாநிலத்தில் இன்று நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசுகையில் இதை குறிப்பிட்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

காங்கிரஸைச் சேர்ந்த அசோக் கெலாட் ஆட்சி செய்யும் ராஜஸ்தான் மாநிலத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்து விட்டது. தலித் சமூகத்தைச் சேர்ந்த பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். அம்மாநில காவல்துறையும் மாநில அரசும் இந்த தவற்றை தடுக்க தவறி விட்டது. மற்ற பல மாநிலங்களில் இதுபோன்ற தாக்குதல்கள் நடந்தபோது ஆவேசமாக பேசியவர்கள் இப்போது ஏன் அமைதியாகி விட்டார்கள். அவர்கள் பின்னணி என்ன.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

SCROLL FOR NEXT