இந்தியா

ஒடிசாவில் புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட்டார் பிரதமர் மோடி: ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு

செய்திப்பிரிவு

ஒடிசாவில் புயல் பாதித்த பகுதிகளை பிரதமர் மோடி இன்று நேரில் சென்று பார்வையிட்டார். ஒடிசாவில் புயல் நிவாரணப் பணிகளுக்காக மேலும் 1000 கோடி ரூபாய் உடனடியாக வழங்கப்படும் என  பிரதமர் உறுதியளித்துள்ளார்.

வங்கக் கடலில் உருவான ஃபானி புயல் கடந்த வெள்ளிக்கிழமை காலை ஒடிசா மாநிலத்தை தாக்கியது. மணிக்கு 245 கி.மீ. வேகத்தில் வீசிய புயல் புரி அருகே கரையைக் கடந்தது. புயலின் கோர தாண்டவம் ஒடிசா மாநிலத்தின் பல பகுதிகளை புரட்டிப் போட்டது.

கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வீசிய புயல், மழையால் மோசமான சேதத்தை ஒடிசா சந்தித்துள்ளது. ஃபானி புயலால் இறந்தவர்களின் எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளது. வீடுகள், மின்கம்பங்கள், மரங்கள் விழுந்ததில் 29 பேர் இறந்துள்ளனர். இறந்தவர்களில் 21 பேர் புரியைச் சேர்ந்தவர்கள் என்று மாநில தலைமைச் செயலாளர் ஏ.பி. பதி தெரிவித்துள்ளார்.

புயலால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட புரி நகரில் 70 சதவீத பகுதிகளில் குடிநீர் விநியோகம் சீராகிவிட்டது. புவனேஸ்வரிலும் குடிநீர் விநியோகம் முழுமையாக சீர் செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட இடங்களில் மக்களுக்கு அடுத்த 15 நாட்களுக்கு உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் ஒடிசாவில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமர் நரேந்திர மோடி இன்று பார்வையிட்டார். இதற்காக தனி விமானத்தில் டெல்லியில் இருந்து புவனேஷ்வர் வந்த பிரதமர் மோடியை, ஒடிசா ஆளுநர் கணேசிலால், முதல்வர் நவீன் பட்நாயக், மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆகியோர் வரவேற்றனர்.

புயல் பாதிப்பு தொடர்பாக முதல்வர் பட்நாயக் மற்றும் அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார். பிரதமர் மோடியிடம் புயல் பாதிப்பு நிவாரண பணிகளை விரைவாக நடத்தி முடிக்க கூடுதல் நிதி உதவி ஒதுக்கீடு செய்ய நவீன் பட்நாயக் கேட்டுக் கொண்டார். அதற்கு பிரதமர் மோடி உரிய ஏற்பாடுகள் செய்வதாக உறுதி அளித்தார்.

பிறகு புயல் பாதித்த பகுதிகளை ஹெலிகாப்டரில் சென்று பிரதமர் மோடி பார்வையிட்டார். அவருடன் முதல்வர் பட்நாயக் மற்றும் அதிகாரிகளும் உடன் சென்றனர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பிரதமர் மோடி ‘‘புயல் பாதிப்பு விவகாரத்தில் மத்திய அரசும், ஒடிசா மாநில அரசும் இணைந்து செயல்பட்டது. சரியான முறையில் தகவல் பரிமாற்றம் நடந்ததால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. புயலால் பாதிக்கப்பட்ட ஒடிசா மக்களுக்கு தேவையான நிதியுதவி அளிக்க மத்திய அரசு தயாராக உள்ளது. ஏற்கெனவே 381 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உடனடியாக 1000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்’’ எனக் கூறினார்.  

SCROLL FOR NEXT