அரசியல்வாதிகள் என்றால் கார்ட்டூன் சித்திரங்களா, எங்களை எளிதாக கிண்டல் செய்வதற்கு நாங்கள் வேலைவெட்டி இல்லாமலா இருக்கிறோம் என்று கர்நாடக முதல்வர் ஹெச்.டி குமாரசாமி ஊடகங்களை காட்டமாக விமர்சித்தார்.
அதுமட்டுமல்லாமல் ஊடகங்களைக் கட்டுப்படுத்த, குறிப்பாக சேனல்களை வரைமுறைப்படுத்த விரைவில் சட்டம் கொண்டுவரப்படும் என்று அவர் எச்சரித்தார்.
கர்நாடக மாநிலத்தில் உள்ள ஊடகங்கள், குறிப்பாக சில செய்தி சேனல்கள் ஆளும் ஜேடிஎஸ், காங்கிரஸ் கூட்டணி குறித்து கடுமையாக விமர்சித்து செய்திகளும், கிண்டல் நிகழ்ச்சிகளும் ஒளிபரப்பியதாகக் கூறப்படுகிறது. மக்களவைத் தேர்தலுக்குப் பின் மாநிலத்தில் குமாரசாமி ஆட்சி நீடிக்காது என்றெல்லாம் விமர்சித்தன.
இதனால், முதல்வர் ஹெச்.டி. குமாரசாமி கடும் அதிருப்தியில் இருந்துவந்தார். இந்நிலையில் மைசூரில் நேற்று ஒரு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார்.
அப்போது அவர் பேசியதாவது:
''ஊடகங்கள் சில கிண்டல் செய்யும் நிகழ்ச்சிகள் மூலம் சமீபகாலமாக அரசியல்வாதிகளை இகழ்ந்து பேசுகின்றன. அரசியல்வாதிகளைக் கிண்டல் செய்யும் அதிகாரத்தை உங்களுக்கு யார் அளித்தது?அரசியல்வாதிகளைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?.
அரசியல்வாதிகள் என்றால் எளிதாக கிண்டல் செய்துவிடலாம், ஏளனப்படுத்திவிடலாம் என்று நினைக்கிறார்களா? இன்று நடக்கும் அனைத்து அரசியல் நிகழ்வுகளையும் கிண்டல் செய்யவும், ஏளனம் செய்யவும் யார் ஊடகங்களுக்கு அதிகாரம் அளித்தது?.
பொதுமக்கள் மத்தியில் அரசியல்வாதிகளான எங்களை யாருக்குச் சாதகமாக நீங்கள் விமர்சிக்கிறீர்கள் என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். அரசியல்வாதிகளை கார்ட்டூன்களில் வரும் சித்திரங்கள் என்று நினைக்காதீர்கள். அரசியல்வாதிகள் ஒன்றும் வேலையில்லாதவர்கள் இல்லை.
இப்போதுள்ள நிலையில் ஊடகங்களைக் கட்டுப்படுத்த, குறிப்பாக சேனல்களைக் கட்டுப்படுத்த சட்டம் கொண்டுவருவது அவசியம் என்று நான் நினைக்கிறேன்.
மே 23-ம் தேதி தேர்தல் முடிவுகள் வந்தவுடன் எனது அரசு எளிதாக கவிழ்ந்துவிடும் என்று கிண்டல் செய்கிறார்கள், கணிக்கிறார்கள். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் முதல்வர் சித்தராமையா ஆகியோரின் ஆசியால் எனது அரசு தொடர்ந்து செயல்படும். 5 ஆண்டுகளை நிறைவு செய்யும்.
ஊடகங்களின் ஆதரவுடன் எனது ஆட்சி நிலைக்கவில்லை, நடக்கவும் இல்லை. மாநிலத்தில் உள்ள 6.5 கோடி மக்களின் ஆதரவால் நடக்கிறது. நான் ஊடகங்களைப் பார்த்து அச்சப்படவில்லை. எனக்கு உங்களைப் பற்றி கவலையும் இல்லை. சேனல்களில் வரும் தொடர்களைப் பார்த்தால் நான் தூக்கத்தை இழந்துவிடுவேன்''.
இவ்வாறு குமாரசாமி பேசினார்.