மோடி ஒரு நவீன ஒளரங்கசீப் எனவும் அவர் வாரணாசியில் நூற்றுக்கணக்கான கோயில்களைத் தரைமட்டமாக்கினார் என்றும் காங்கிரஸ் தலைவர் சஞ்சய் நிருபம் தெரிவித்துள்ளார்.
வாரணாசியில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:
''நான் வாரணாசி வந்த பிறகு இங்கு நூற்றுக்கணக்கான கோயில்கள் இடித்துத் தரைமட்டமாக்கப் பட்டதை அறிந்தேன். அதேபோல விஸ்வநாதர் கோயிலிலும் தரிசனத்துக்காக ரூ.550 கட்டணம் புதிதாக வசூலிக்கப்படுகிறது.
பிரதமர் மோடி ஒரு நவீன கால ஒளரங்கசீப் என்று நினைக்கிறேன். ஒளரங்கசீப்பின் கொடூர ஆட்சிக் காலத்தில் நடந்ததைப் போல பனாரஸ் மக்களின் கோயில்களை வெற்றிகரமாக அழித்துவிட்டார். தங்களுடைய கடவுளைப் பார்க்க விரும்பும் பக்தர்கள் ஜிஸ்யா (வரி) செலுத்த வேண்டும் என்று கட்டாயப்படுத்திய நவீன ஒளரங்கசீப்பின் (மோடி) செயலைக் கண்டிக்கிறேன்.
இதில் விசித்திரம் என்னவென்றால் இந்து மக்களின் நம்பிக்கைகளையும் உரிமைகளையும் பாதுகாப்பது குறித்து மோடி பேசுவதுதான். அவரின் செயல்களுக்கு வன்மையாகக் கண்டனம் தெரிவிக்கிறேன்.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் பெயரைச் சொல்லித் தேர்தலைச் சந்திக்க நாங்கள் தயார். ஆனால் என்று ராஜீவின் பெயரை மோடி சொன்னாரோ அன்றே, அமேதியில் குறைந்தபட்சம் இரண்டரை லட்ச வாக்குகள் வித்தியாசத்தில் ஸ்மிரிதி இரானி தோற்பது உறுதியாகிவிட்டது'' என்றார் சஞ்சய் நிருபம்.
வாரணாசியில் கடைசி கட்டமாக மே 19-ம் தேதி தேர்தல் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.