வெறுப்பு, பொய், பொதுவாழ்வின் இலக்கணத்தை மீறுவது ஆகியவையே பிரதமர் மோடியின் குணங்கள் என்று மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின் அரசியல் கட்சிகளுக்கு மத்தியில் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. குறிப்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மோடி ஆகியோரிடையே வார்த்தை மோதல் வலுத்து வருகிறது. ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சனம் செய்து பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
அமேதியில் பிரச்சாரம் செய்த பிரதமர் மோடி,''போபர்ஸ் ஊழல் வழக்கில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நேர்மையானவர் என்று மற்றவர்கள் புகழ்ந்தனர். ஆனால் இறக்கும்போது அவர் ஊழல்வாதிகளில் நம்பர் ஒன்னாக இருந்தார்'' என்று பேசியிருந்தார்.
இதுகுறித்துத் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள தாக்கரே, ''நரேந்திர மோடியின் பண்புகளை அடையாளப்படுத்தும் விஷயங்கள் மூன்று. அவை, வெறுப்பு, முடிவில்லாத பொய்கள், மனசாட்சியே இல்லாமல் பொது வாழ்வின் அடிப்படை நல்லொழுக்கங்களை மீறுவது.
மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி குறித்து மோடி பேசிய வார்த்தைகள் இவற்றை உறுதிப்படுத்துகின்றன. இதை நிச்சயமாக நம் நாடு மன்னிக்காது'' என்று தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, மகாராஷ்டிராவில் ஏராளமானப் பேரணிகளை நடத்திய தாக்கரே, அவற்றி மோடி, அமித் ஷா மற்றும் மத்திய அரசின் கொள்கைகள் குறித்து தொடர்ந்து விமர்சித்தது குறிப்பிடத்தக்கது.