பிரதமர் நரேந்திர மோடி 5 ஆண்டுகளில் செய்தியாளர்களிடம் தன் முகத்தைக் காட்ட, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி புதுடெல்லியில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்கள் சந்திப்பில் பல்வேறு கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.
காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலாவுடன் ராகுல் காந்தி செய்தியாளர்கள் கேள்விக்குப் பதில் அளித்தார்.
மோடியின் செய்தியாளர்கள் சந்திப்பு பற்றி நிருபர் ஒருவர் ராகுல் காந்தியிடம் கேட்க, ‘மிகப்பிரமாதம்’ என்றார். “முன்னுதாரணமற்ற ஒரு நிகழ்வு. ஒரு நாட்டின் பிரதமர் முதன் முறையாக செய்தியாளர்களைச் சந்தித்திருக்கிறார்” என்றார் ராகுல் காந்தி.
ஆனால் ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக ஏன் விவாதத்துக்கு அவர் தயாராக இல்லை என்று யாராவது ஒரு நிருபர் பிரதமரை கேட்டிருந்தால் அது நன்றாக இருந்திருக்கும் என்று கூறிய ராகுல், “ஏன் விவாத்திற்கு ஒப்புக் கொள்ளவில்லை, தயவு செய்து செய்தியாளர்களிடம் கூறுங்கள்” என்று யாராவது அவரைக் கேட்டிருக்க வேண்டும்.
பிராக்யா சிங், கோட்ஸே பற்றி கூறிய கருத்து பற்றிய கேள்விக்கு ராகுல் காந்தி, “பாஜக வன்முறையை ஆதரிக்கும் கட்சி. அகிம்சையை அல்ல” என்றார்.
மேலும், “மோடி என்ன கூறுகிறாரா அதையெல்லாம் அவர் கூறலாம் பிரச்சினையில்லை, ஆனால் அதையே வேறொரு கட்சி பேசினால் தண்டனை. ஒருவேளை மோடியின் தேர்தல் பிரச்சாரப் பயணத்திட்டத்தை ஒட்டி தேர்தல் வாக்குப்பதிவுக் கட்டங்கள் தீர்மானிக்கப்பட்டுள்ளதோ?”என்று கிண்டலடித்தார்.
“எதிர்க்கட்சியாக சிறப்பாகவே செயலாற்றியுள்ளோம். மோடி என்ற கருத்தை எங்களால் முடிந்த அளவுக்கு கலைத்துப் போட்டு விட்டோம். வெற்றிகரமாக பாஜக ஆட்சியின் தோல்விகளை மக்களிடம் கொண்டு சென்றோம்.
காங்கிரஸ் கட்சியின் முதல் பணி பாஜகவின் வெற்றி வாய்ப்புக் கதவுகளை அடைக்க வேண்டும் என்பதே. இதனை 90% நாங்கள் செய்திருக்கிறோம் என்றே கருதுகிறேன் மீதி 10%-ஐ மோடியே செய்து விட்டார்.
என் பெற்றோர் பற்றி மோடி அசிங்கமாகப் பேச நினைத்தால் அது அவரது விருப்பம். சோனியா, மன்மோகன் சிங் ஆகியோர் அனுபவசாலிகள் அவர்கள் அனுபவத்திலிருந்து நாங்கள் பயன் பெறுவோம்.
மாயாவதி, முலாயம் சிங், மமதா பானர்ஜி நிச்சயம் பாஜகவுக்கு ஆதரவளிக்க மாட்டார்கள் என்பது உறுதி. இந்தத் தேர்தலில் மதச்சார்பற்ற உருவாக்கங்கள் நிறைய இடங்களில் வெற்ரி பெறும், என்றார் ராகுல் காந்தி.