இந்தியா

இடதுசாரிகளுக்கு ஏன் இந்த சோதனை?

ஷோபனா கே.நாயர்

கடந்த 2004-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் இடதுசாரி கட்சிகள் 59 தொகுதிகளில் வெற்றி பெற்றன. இதில் மார்க்சிஸ்ட் கட்சி மட்டும் 44 இடங்களைக் கைப்பற்றியது. கடந்த 2014 மக்களவைத் தேர்தலில் இடதுசாரிகளின் பலம் 10 எம்பிக்களாக குறைந்தது. தற்போதைய மக்களவைத் தேர்தலில் ஐந்து இடதுசாரி எம்.பி.க்கள் மட்டுமே மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். ஒரு காலத்தில் மேற்குவங்கம், கேரளா, திரிபுரா மாநிலங்களில் இடதுசாரி கட்சிகள் அசைக்க முடியாத ஆதிக்க சக்திகளாக இருந்தன. மேற்குவங்கத்தில் சுமார் 34 ஆண்டுகளும் திரிபுராவில் சுமார் 25 ஆண்டுகளும் இடதுசாரி கூட்டணி ஆட்சியில் இருந்தது.

கடந்த 2011-ம் ஆண்டு மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தலில் இடதுசாரிகளிடம் இருந்து ,திரிணமூல் காங்கிரஸ் ஆட்சியைப் பறித்தது. கடந்த 2013 திரிபுரா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவிடம் இடதுசாரி கூட்டணி தோல்வியைத் தழுவியது. தற்போது கேரளாவில் மட்டுமே மார்க்சிஸ்ட் தலைமையிலான இடதுசாரி முன்னணி ஆட்சியில் உள்ளது. இப்போதைய மக்களவைத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 3, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகள் மட்டுமே கிடைத்துள்ளன. இரு கட்சிகளும் தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியில் தலா 2 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளன. கேரளாவின் 20 மக்களவைத் தொகுதிகளில் ஒன்றில் மட்டுமே மார்க்சிஸ்ட் வெற்றி பெற்றுள்ளது.

மேற்குவங்கத்தில் இடதுசாரி கட்சிகள் ஓரிடத்தில் கூட வெற்றி பெறவில்லை. ஜாதவ்பூர் மார்க்சிஸ்ட் வேட்பாளர் விகாஷ் ரஞ்சன் பட்டாச்சார்யா தவிர இதர இடதுசாரி வேட்பாளர்கள் அனைவரும் டெபாசிட் இழந்துள்ளனர்.

"இது மிகப்பெரிய பின்னடைவு. மதரீதியான உணர்வு மேலோங்கி வரும் நிலையில் ஜனநாயக, மதச்சார்பற்ற கட்சிகளுக்கு இடமில்லாமல் போய்விடுகிறது. மக்களவைத் தேர்தல் தோல்வி குறித்து ஆத்ம பரிசோதனை செய்யப்படும்" என்று மார்க்சிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி கூறியுள்ளார். அந்த கட்சியின் பொலிட் பீரோ கூட்டம் நாளை நடைபெறுகிறது. வரும் ஜூன் 6-ம் தேதி கட்சியின் மத்திய கமிட்டி கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டங்களில் தேர்தல் தோல்வி குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட உள்ளன.

"மேற்குவங்க மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் போட்டியிட வேண்டாம்" என்று சீதாராம் யெச்சூரி வேண்டுகோள் விடுத்தார். இதனை காங்கிரஸ் ஏற்கவில்லை. ஒருபடி மேலே சென்று கேரளாவின் வயநாடு தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிட்டார். இதன் விளைவாக அந்த மாநிலத்தின் 20 தொகுதிகளில் காங்கிரஸ் கூட்டணி 19-ஐ கைப்பற்றியுள்ளது. ஆலப்புழா தொகுதியில் மட்டுமே மார்க்சிஸ்ட் கட்சிக்கு ஆறுதல் வெற்றி கிடைத்துள்ளது. கேரள மக்களவைத் தேர்தல் தோல்விக்கு 2 முக்கிய காரணங்களை மார்க்சிஸ்ட் வட்டாரங்கள் சுட்டிக் காட்டுகின்றன. முதல் காரணம், மத்தியில் பாஜகவை எதிர்ப்பதற்காக பெருவாரியான சிறுபான்மையினர் காங்கிரஸுக்கு வாக்களித்துள்ளனர். இரண்டாவது காரணம், சபரிமலை விவகாரத்தில் முதல்வர் பினராயி விஜயன் அரசின் நிலைப்பாட்டால் இந்துக்களின் வாக்குகள் இடதுசாரி கட்சிகளுக்கு கிடைக்கவில்லை.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. அந்த கட்சி தரப்பில் பிஹாரின் பேகுசராய் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட கண்ணையா குமாரால் 2,67,917 வாக்குகளை மட்டுமே பெற முடிந்தது. சுமார் 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்கிடம் அவர் தோல்வியடைந்துள்ளார்.

தேர்தல் தோல்வி குறித்து இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலாளர் டி.ராஜா கூறியபோது,"இந்தியாவில் இடதுசாரி இயக்கம் முடிவுக்கு வரவில்லை. கடந்த காலத்தில் பலமுறை இடதுசாரி கட்சிகள் தோல்வியை சந்தித்துள்ளன. இருந்தாலும் நாங்கள் இன்னும் உயிர்ப்புடன் உள்ளோம். பாசிச சக்திகளுக்கு எதிராக உறுதியாகப் போராடுவது இடதுசாரி கட்சிகள் மட்டுமே" என்று தெரிவித்தார்.

"எத்தனை முறை தோல்வி அடைந்தாலும் பீனிக்ஸ் பறவை போல மீண்டும் எழுந்து வருவோம்" என்று இடதுசாரி தலைவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT