இந்தியா

மண்ணெண்ணெய் ஒதுக்கீடு கோரி வழக்கு: தமிழக அரசுக்கு 6 வாரம் அவகாசம்

செய்திப்பிரிவு

கூடுதல் மண்ணெண்ணெய் ஒதுக்கீடு கோரி தமிழக அரசு தொடர்ந்த வழக்கில், மத்திய அரசின் மனுவுக்கு பதிலளிக்க தமிழகத்துக்கு ஆறு வாரம் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்ட மண்ணெண்ணெய் அளவை கடந்த 2011-ம் ஆண்டு மத்திய அரசு 55 சதவீதமாக குறைத்தது.

இதை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த மனுவில், ‘தமிழகத்துக்கு மாதத்துக்கு 65,140 கிலோ லிட்டர் மண்ணெண்ணெய் தேவைப்படுகிறது.

இந்த அளவை மத்திய அரசு திடீரென 29,060 கிலோ லிட்டராக குறைத்து விட்டது. தமிழகத்தில் ஏழை, எளிய மக்கள் மண்ணெண்ணையை சமையலுக்கு பயன்படுத்து கின்றனர். மத்திய அரசின் முடி வால், 83 லட்சம் குடும்ப அட்டை தாரர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, மத்திய அரசின் உத்தரவை ரத்து செய்து, 65,140 கிலோ லிட்டர் ஒதுக்க உத்தரவிட வேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கில் மத்திய அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இவ்வழக்கு தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா, நீதிபதிகள் குரியன் ஜோசப், ரோஹின்டன் நரிமன் ஆகியோர டங்கிய அமர்வு முன்பு வெள்ளிக் கிழமை விசாரணைக்கு வந்தது.

தமிழக அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் கைலாஷ் வாசுதேவ் ஆஜரானார். மத்திய அரசு சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் பிங்கி ஆனந்த் ஆஜராகி, ‘தமிழகத்தில் இயற்கை எரிவாயு பயன்பாடு அதிகரித்துள்ளது. அதை கணக்கில் கொண்டு, மண்ணெண்ணெய் அளவு குறைக்கப்பட்டுள்ளது’ என்று வாதிட்டார்.

மத்திய அரசின் மனுவை படித்துப் பார்த்து பதிலளிக்க தமிழக அரசு சார்பில் அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து, தமிழகத்துக்கு ஆறு வாரம் அவகாசம் அளித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தலைமை நீதிபதி நகைச்சுவை

தமிழக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்த பிங்கி ஆனந்த், ‘எல்லா மாநிலங்களுக்கும் பின்பற்றப்படும் பொதுவான கொள்கையை தான் மத்திய அரசு அமல்படுத்துகிறது’ என்றார். அப்போது தலைமை நீதிபதி, ‘இப்போதுள்ள நிலையில் நீங்கள் (மத்திய அரசு) சிறப்பு சலுகை காட்ட வேண்டும் என்று தமிழகம் எதிர்பார்க்கிறது’ என்று சிரித்தபடி தெரிவித்தார். தலைமை நீதிபதியின் கருத்து தற்போதைய அரசியல் சூழ்நிலையுடன் தொடர்புடையதாக இருந்ததால் அனைவரும் சிரித்தனர்.

SCROLL FOR NEXT