பிரதமர் மோடி மற்றும் பாஜக தலைவர் அமித் ஷாவின் பேச்சில் விதிமீறல் இல்லை என்று தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
பிரதமரின் தேர்தல் பேச்சுகள் மீது புகார் எழுந்த நிலையில், இதுவரை 5 உரைகளில் விதிமுறை மீறல் இல்லை என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதில் இரண்டு புகார்களில் ஒரு தேர்தல் ஆணையர் எதிர்ப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
முன்னதாக, காங்கிரஸ் தலைவர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, வாரணாசி மற்றும் உத்தரப் பிரதேசத்தில் ஏப்ரல் 25-ம் தேதி மோடி பேசியது மற்றும் செய்தி நிறுவனத்துக்கு ஏப்ரல் 26-ம் தேதி பேட்டி அளித்தது ஆகியவற்றில் தேர்தல் விதிமீறல் இருப்பதாகத் தெரிவித்திருந்தார்.
புல்வாமா தீவிரவாதத் தாக்குதல் குறித்தும் பதிலடித் தாக்குதலாக 42 தீவிரவாதிகள் கொல்லப்பட்டது குறித்தும் மோடி பேசியிருந்தார்.
இந்நிலையில், தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையிலான தேர்தல் ஆணையர்கள், தேர்தல் அதிகாரிகளிடம் இருந்து பெற்ற அறிக்கையை தீவிரமாக ஆய்வு செய்தனர். அந்த ஆய்வின் அடிப்படையில் பிரதமர் மோடியின் பேச்சில் எந்தவிதமான தேர்தல் விதிமுறை மீறலும் இல்லை என்று தெரிவித்தனர்.
’அமித் ஷா கருத்தில் தவறில்லை’
அதேபோல ஏப்ரல் 22-ம் தேதி மேற்கு வங்கத்தின் கிருஷ்ணா நகரில் பேசிய பாஜக தலைவர் அமித் ஷா, பாலகோட் தாக்குதலைக் குறிப்பிடும் வகையில் ராணுவத்தினரை 'மோடியின் வாயு சேனா' என்று கூறியிருந்தார்.
இது தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் ரன்தீப் சுர்ஜேவாலா தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்தும், ஆதாரங்களை வழங்கியும் தலையிடக் கோரினார். அமித் ஷா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இந்நிலையில் அமிஷ் ஷாவின் பேச்சிலும் தேர்தல் விதிமுறை மீறல் இல்லை என்று தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர். அவரின் பேச்சில், எந்தவிதமான தேர்தல் நடத்தை விதிமுறை மீறலும், மக்கள் பிரதிநிதித்துவச் சட்ட மீறலும் இல்லை என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, 'மோடியின் சேனைகள்' என்று உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசியதற்குத் தேர்தல் ஆணையம் அவரை எச்சரிக்கை செய்தது குறிப்பிடத்தக்கது.