மோடி நாட்டின் பிரதமராக தொடர வேண்டும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஏன் விரும்புகிறார் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
மும்பை தாக்குதல், பதான் கோட் தாக்குதல் ஆகியவற்றுக்கு காரணமான ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக ஐ.நா. சபை நேற்று அறிவித்தது. கடந்த 9 ஆண்டுகளாக இந்திய அரசு பல்வேறு கட்டங்களில் மேற்கொண்ட முயற்சிக்கு நேற்று வெற்றி கிடைத்தது.
கடந்த 4 முறை மசூத் அசாருக்கு எதிராக இந்தியா ஐ.நா.வில் தீர்மானம் கொண்டு வந்தபோதிலும் அதே சீனா தனது வீட்டோ அதிகாரத்தால் முட்டுக்கட்டை போட்டு நிறைவேற்றவிடாமல் செய்தது. ஆனால், இந்த முறை சீனாவும் ஆதரவு தெரிவித்ததால், மசூத் அசாருக்கு எதிரான தீர்மானம் எந்தவிதமான சிக்கலின்றி நிறைவேறியது.
இது குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் நிதிஅமைச்சருமான ப.சிதம்பரம் இன்று ட்விட் செய்துள்ளார். அதில் அவர் கூறுகையில், " கடந்த 1999-ம் ஆண்டு இந்திய விமானத்தை கடத்தப்பட்டபோது, ஆட்சியில் இருந்த பாஜக அரசுதான், மசூத் அசாரை விடுவி்த்தது.
அதன்பின் 2008-ம் ஆண்டு மும்பையில் நடந்த மிகப்பெரிய தீவிரவாதத் தாக்குதலுக்கு மசூத் அசார் காரணமாகினார். இவரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க கடந்த 2009-ம் ஆண்டு ஆட்சியில் இருந்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு முயற்சி மேற்கொண்டது.
அந்த முயற்சிக்கு 2019-ம் ஆண்டு வெற்றி கிடைத்து, முழுமை பெற்றுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால், பிரதமராக மோடி தொடர வேண்டும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஏன் விரும்புகிறார்? " எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.