காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது பதவியை ராஜினாமா செய்வதில் பிடிவாதமாக இருக்கும் நிலையில் காங்கிரஸ் இறுக்கத்தை சற்றே தளர்த்தும் வகையில் ராகுல் அவரது செல்லப் பிராணியுடன் காரில் செல்லும் புகைப்படம் ஒன்று வெளியாகியிருக்கிறது.
ராகுல் காந்தி அவரது துக்ளக் சாலை வீட்டிலிருந்து காரில் செல்கிறார். காருக்குள் அவரது செல்லப்பிராணி பிடி 'Pidi' இருக்கும் காட்சி அடங்கிய புகைப்படம் வைரலாகி வருகிறது.
இந்த நாய்க்குட்டி முதன்முதலில் கடந்த 2017-ல் ராகுலால் இணைய உலகுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது.
ராகுல் காந்தி தனது Office of RG என்ற ட்விட்டர் பக்கத்தில் தன் கருத்துக்களைப் பதிவிட்டு வருகிறார். இந்த ட்விட்டர் பக்கம் வேறு ஒருவரால் கையாளப்படுகிறது. ராகுல் பெயரில் இப்பக்கத்தில் பதிவுகள் இடுவது யார் என்ற கேள்வி எழுந்தது?
இதற்கு பதிலளிக்கும் விதமாக புதிய பதிவு ஒன்றை வெளியிட்டார் ராகுல். அதில் ராகுலின் நாய்க்குட்டியின் வீடியோ இடம்பெற்றது. அந்த நாய்க்குட்டி இரண்டு கால்களால் நின்றபடி மூக்கின் மீது வைக்கப்படும் பிஸ்கெட்டை கீழே விழாமல் கவ்வும் . அந்த வீடியோவை பகிர்ந்த ராகுல் கீழ், என் ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்வது நானே. இதோ இவர் பெயர் பிடி. இவரால் இது மட்டுமல்ல, என்னால் நிறைய செய்யமுடியும் என்று அந்த நாய்க்குட்டி கூறுவதுபோல ட்வீட் செய்திருந்தார்.
தேர்தல் தோல்விக்குப் பின்னர் ராகுல் காந்தியின் முதல் அரசியல் சார்பற்ற இயல்பான புகைப்படம் என்பதால் இந்தப் படம் வேகமாக வைரலாகி வருகிறது.