இந்தியா

டெல்லி தேர்தலில் யாருக்கு வெற்றி?- தூள் கிளப்பும் சூதாட்டம்; முந்தும் பாஜக

ஐஏஎன்எஸ்

கிரிக்கெட் போட்டிகளை போலவே டெல்லியில் தேர்தல் களத்தை முன் வைத்தும் தற்போது  பெரிய அளவில் சூதாட்டங்கள் நடந்து வருகின்றன. எந்த கட்சிக்கு வெற்றி வாய்ப்பு என்பதை முன்வைத்து நடைபெறும் இந்த சூதாட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தலைநகர் டெல்லியில் உள்ள 7 மக்களவைத் தொகுதிகளுக்கும் வரும் 12-ம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. சாந்தினி சவுக், வடகிழக்கு டெல்லி, கிழக்கு டெல்லி, புதுடெல்லி, வடமேற்கு டெல்லி, மேற்கு டெல்லி, தெற்கு டெல்லி ஆகிய 7 தொகுதிகளிலும் தற்போது அனல் பறக்கும் பிரச்சாரம் நடந்து வருகிறது. காங்கிரஸூடன் கூட்டணி அமையாத நிலையில் ஆம் ஆத்மி தனியாக களமிறங்கியுள்ளது.

இதனால் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி என மும்முனை போட்டி நிலவி வருகிறது. 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் 7 தொகுதிகளிலும் பாஜக வென்றது. எனினும் அடுத்து நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தோற்று ஆம் ஆத்மி ஆட்சியை கைபற்றியது. இந்த தேர்தலில் மும்முனை போட்டி காரணமாக பாஜகவுக்கு சற்று வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. எனினும் 2014-ம் ஆண்டை போன்று வாய்ப்பில்லை என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

இந்தநிலையில் கிரிக்கெட் போட்டிகளை மிஞ்சும் அளவுக்கு தேர்தலில் எந்த கட்சி வெற்றி பெறும் என்பதை முன் வைத்து டெல்லியில் சூதாட்டம் சுறுசுறுப்பாக நடந்து வருகிறது. டெல்லியில் உள்ள கரோல்பார்க், சத்தா மார்கெட், காரிபோலி, பழைய டெல்லி உள்ளிட்ட இடங்களில் தேர்தல் சூதாட்டம் நடைபெறுவது வழக்கம் தான்.

அதேபோன்று இந்த தேர்தலிலும் நடைபெறுகிறது. யார் வெற்றி பெறுவார்கள் என்பது மட்டுமல்லாமல், இரண்டாவது இடத்தை எந்த கட்சி பிடிக்கும், எந்த வேட்பாளர் எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்பதை முன்னிறுத்தியும் சூதாட்டம் நடைபெறுகிறது.

டெல்லி சூதாட்டத்தில் பாஜக 5 இடங்களில் வெற்றி பெறும், 2 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெறும், ஆம் ஆத்மி எந்த தொகுதியிலும் வெற்றி பெறாது என அதிகமானோர் பணம் கட்டியுள்ளதாக தெரிகிறது.

வேட்பாளர்களை பொறுத்தவரையில் பாஜக வேட்பாளர்கள் தெற்கு டெல்லியில் ரமேஷ் பிதாரியும், கிழக்கு டெல்லியில் கவுதம் கம்பீரும், சாந்தினி சவுக்கில் ஹர்ஷவர்த்தனும், புதுடெல்லியில் மீனாட்சி லேகியும், மேற்கு டெல்லயில் பர்வேஷ் சிங்கும் வெற்றி பெறுவார்கள் என சூதாட்ட நபர்கள் கணித்து பணம் செலுத்தியுள்ளனர்.

அதுபோலவே பாஜகவின் மனோஜ் திவாரி, காங்கிரஸின் ஷீலா தீட்சித் இவர்களில் யார் வெற்றி பெறுவார்கள், எவ்வளவு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவர்கள் எனப்தை வைத்தும் பலரும் பணம் செலுத்தியுள்ளனர்.

டெல்லியில் சூதாட்ட நபர்களின் கணிப்பு பலமுறை தேர்தல் முடிவுகளை ஒட்டியே வந்துள்ளதால் எப்போதுமே இவர்கள் மீது அரசியல் கட்சிகளுக்கும் ஆர்வம் இருக்கும். சூதாட்டத்தில் யாருக்கு அதிகமான ஆதரவு உள்ளது என்பதை தெரிந்து கொள்ள அரசியல்வாதிகளும் ஆர்வம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT