நடைபாதைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பது குறித்து விளக்கம் அளிக்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
‘வாய்ஸ் ஆப் இந்தியா’ என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் தலைவர் தானேஷ் லெஸ்தான் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார். அதில் நாடு முழுவதும் நடைபாதைகள், சாலையோரங்கள் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதால் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கானோர் விபத்தில் பலியாகின்றனர் என்று சுட்டிக் காட்டியுள்ளார். நடைபாதைகள் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதால் பாதசாரிகள் சாலையில் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது, இதுவே விபத்துக்கு முக்கிய காரணமாக அமைகிறது என்றும் அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனு தலைமை நீதிபதி ஆர்.எம். லோதா தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. நடைபாதைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பது குறித்து 10 வாரங்களுக்குள் பதில் அளிக்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.