இந்தியா

தேர்வுக்கு முதல் நாள் இரவு தந்தையும் சகோதரனும் விபத்தில் பலி: சோகத்திலும் தேர்வு எழுதி 92% மதிப்பெண் பெற்ற மாணவியின் மன உறுதி

செய்திப்பிரிவு

10-ம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் நேற்று வெளியான நிலையில் தேர்வுக்கு முதல்நாள் தந்தையும், தனயனும் விபத்தில் மறைந்த நிலையில் துக்கமான சூழ்நிலையிலும் தேர்வு எழுதி 92 சதவீதம் மதிப்பெண் பெற்று வெற்றிபெற்ற உத்தரபிரதேச மாநில காசியாபாத்தைச் சேர்ந்த மாணவிக்கு பாராட்டு குவிகிறது.

10-ம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இதில் 92 சதவீதம் மதிப்பெண் பெற்ற மாணவியை அந்த ஊரே முன் மாதிரியாக வைத்து பாராட்டியது. இதில் என்ன அதிசயம் என்றால் அந்தப்பெண்ணின் வாழ்க்கையில் நிகழ்ந்த மிகப்பெரிய சோகத்தைத்தாங்கி இந்த வெற்றியை அவர் அடைந்ததுதான்.

உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத் பகுதியைச் சேர்ந்தவர் மாணவி தியா சிங். இவர் அங்குள்ள கோவிந்தபுரம் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்துவந்தார். இவருக்கு 11 வயதில் கார்விட் என்கிற சகோதரன் உண்டு. தாய், தந்தை, பாட்டியுடன் அமைதியாக வாழ்ந்த குடும்பம்.  

சகோதரன் அருகில் உள்ள பள்ளியில் ஐந்தாம் வகுப்பு தேர்வு எழுதியிருந்தார். தியா சிங்கின் தந்தை பக்கத்து ஊரில் சிறிய அள்வில் பட்டாசுக்கடை நடத்தி வந்தார். அதில் வரும் வருமானம் அந்த குடும்பத்திற்கு போதுமானதாக இருந்தது.

தியாசிங் பள்ளியில் அருமையாக படிக்ககூடிய மாணவி, இதனால் தனது மகளை டாக்டருக்கு படிக்கவைக்க அவரது தந்தை ஆசைப்பட்டார். அதற்கேற்றார்போல் தியாசிங்கும் படித்து வந்த நிலையில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நெருங்கி வந்தது.

மார்ச் 7 அன்று காலை முதல் தேர்வு துவங்க இருந்த நிலையில் பத்தாம் வகுப்பில் நல்ல மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற வேண்டும் அப்போதுதான் அறிவியல் பாடத்தை எடுத்து மருத்துவப் படிப்பிற்கு போக முடியும் என கூறியிருந்தார் தியாவின் தந்தை.

மார்ச் 6-ம் தேதி தேர்வுக்காக கடினமாக தியாசிங் படிக்க வீட்டுக்கான இரவு உணவை வாங்க இரவு 9-30 மணி அளவில் தந்தையும் உடன் சகோதரன் கார்விட்டும் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். சாஷ்தி நகர் என்ற இடத்தில் இருவர் சென்ற மோட்டார் சைக்கிள் மீது லாரி ஒன்று மோத சம்பவ இடத்திலேயே தியாசிங்கின் தந்தை பலியானார்.

சகோதரன் கார்விட் உயிருக்கு போராடிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தந்தையின் மரணம் ஒருபுறம், சகோதரன் உயிருக்கு போராடும் நிலை மறுபுறம் தியாசிங் தனது தாயாருடன் மருத்துவ மனை, மார்ச்சுவரி என இரவு முழுதும் அலையும் நிலை ஏற்பட்டது.

இடையில் தனக்கு ஏற்பட்ட மிகப்பெரிய இழப்பிற்காக கதறி அழுத தியாசிங் காலையில் அனைத்தையும் தூர வைத்துவிட்டு, தனது தாயாருக்கு ஆறுதல் தெரிவித்துவிட்டு தனது 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுத பள்ளிக்குச் சென்றார்.

இதற்கிடையே சகோதரனும் மரணமடைய தேர்வெழுதிவிட்டு வீடு திரும்பிய தியாசிங் இருவரது இறுதிச்சடங்கையும் முடிக்கவேண்டிய துயர நிலை ஏற்பட்டது. அதன்பின்னர் அவர் எதைக்குறித்தும் மனதில் வைக்காமல் தேர்வு ஒன்றையே குறிக்கோளாக வைத்து தேர்வெழுதினார். தேர்வு முடிவு நேற்று வெளியானபோது அவரது பள்ளி முதற்கொண்டு அவரது ஊரில் பலரும் அதை எதிர்ப்பார்த்த நிலையில் 92.4% மதிப்பெண் எடுத்திருந்தார் தியாசிங்.

இதுகுறித்து தியாசிங்கின் தாய் ரீனா சாகர் கூறுகையில், “தேர்விற்கு முதல் நாள் தியாவின் தந்தை விபத்தில் இறந்துவிட்டார். அவளது தம்பி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் இருந்தான். இதனால் நானும் தியாவும் இரவு முழுவதும் மருத்துவமனையில் அழுது கொண்டே அமர்ந்திருந்தோம்.

எனினும் காலையில் தியா தனது தேர்வு எழுத சென்றுவிட்டாள். அதன்பிறகு வந்து இறுதி சடங்கில் கலந்துகொண்டார். இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் தியா மனம் தளராமல் அவளது தந்தை கூறிய வார்த்தைப்படி நடந்துகொண்டாள். ஏனென்றால் விபத்து ஏற்படுவதற்கு ஒரு மணி நேரம் முன்பு தியாவின் தந்தை ‘நீ நன்றாக பள்ளிப்படிப்பை முடித்து டாக்டர் ஆக வேண்டும்’ எனக் கூறினார். அதற்கேற்ப தேர்வை எழுதி 92.4% மதிப்பெண் எடுத்துள்ளார்” எனதெரிவித்துள்ளார்.

தேர்வு முடிவு குறித்து தியாசிங் கூறுகையில், “இன்னும் நானும் எனது தம்பியும் போட்ட சிறு சிறு சண்டைகள் என் நினைவில் இருந்து நீங்கவில்லை ஆனாலும் எனது சகோதரன் என்மீது மிகவும் பாசமாக இருந்தான்.

எனது தேர்வு முடிவை என் தந்தை பார்த்திருந்தால் மிகவும் மகிழ்ச்சியடைந்திருப்பார். எனது தந்தை மற்றும் தம்பி ஆகியோருக்கு விபத்து ஏற்படாமல் இருந்திருந்தால் நான் இன்னும் அதிக மதிப்பெண்கள் எடுத்திருப்பேன். இந்த விபத்து எனக்கு பிடித்தவர்களை என்னிடம் இருந்து பறித்து கொண்டது” எனக் கூறினார்.

மேலும் தியாசிங்கின் தந்தை மரணம் அடைந்ததால் அவரது குடும்ப வருமானத்திற்காக அவரது தாயார் ரீனாசாகருக்கு ஆரம்பப்பள்ளி ஆசிரியை உத்யோகம் வழங்கப்பட்டுள்ளது. தியாசிங் பிளஸ்.1, பிளஸ்.2 பயில அனைத்து உதவிகளையும் பள்ளி நிர்வாகம் செய்வதாக உறுதியளித்துள்ளது.

இதுகுறித்து அவரது பள்ளி இயக்குனர் கந்தேல்வால் கூறுகையில் தியாசிங் ஒரு அறிவார்ந்த மனதைரியமிக்க மாணவி, அவர் தந்தை எதிர்ப்பார்த்த மருத்துவ கனவை நிறைவேற்ற உதவும் வகையில் அறிவியல் குரூப்பில் தியாவை சேர்த்துள்ளோம். அவர் அவரது தந்தையின் கனவை நிறைவேற்றுவார்.

அவரது கல்வி கெடாமல் இருக்க அனைத்து உதவிகளையும் நாங்கள் எடுப்போம். தியாசிங் தேர்வுக்கு முதல்நாள் சந்தித்த துயரமான இழப்பைத்தாண்டி சாதித்துள்ளார். அவர் அவரது வியத்தகு திறமையை அனைவருக்கும் உணர்த்திவிட்டார்” என்று தெரிவித்துள்ளார்.

தியாசிங் தனது மன உறுதியால் இன்று அவரது ஊரைத்தாண்டி சமூக வலைதளங்களில் அனைவராலும் பாராட்டப்படுகிறார். தியாசிங்கின் தந்தை, சகோதரன் மரணத்துக்கு காரணமான லாரியை இதுவரை போலீஸார் பிடிக்கவில்லை என்பது கூடுதலான ஒரு துயரமான விஷயம்.

SCROLL FOR NEXT