வங்கக் கடலில் உருவான ஃபானி புயல் நேற்று ஒடிசாவில் கரையைக் கடந்தது. அப்போது மணிக்கு 245 கி.மீ. வேகத்தில் பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. இதன் காரணமாக 6 பேர் உயிரிழந்தனர். 160 பேர் படுகாயம் அடைந்தனர்.
கடந்த ஏப்ரல் 25-ம் தேதி தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதியில் காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவானது. இது 26-ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் 28-ம் தேதி தீவிர புய லாகவும் மாறியது. கடந்த 29-ம் தேதி அதிதீவிர புயலாக உருவெடுத்தது.
14 மாவட்டங்கள் பாதிப்பு
ஃபானி என்று பெயரிடப்பட்ட இந்த புயல் வடதமிழகம், தெற்கு ஆந்திரா கடற்கரையை நெருங்கி வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திசை மாறி ஒடிசாவை நோக்கி நகர்ந்தது. அந்த மாநிலத்தின் கடலோர மாவட்டங்களை நேற்று காலை 8 மணிக்கு ஆக்ரோஷமாக தாக்கியது. அப்போது மணிக்கு 200 கி.மீ. முதல் 245 கி.மீ. வேகத்தில் பலத்த சூறைக் காற்றுடன் கனமழை பெய்தது. ஆன்மிக சுற்றுலாத்தலமான புரி பகுதியில் மையம் கொண்டிருந்த புயல், 14 மாவட்டங்களில் சுமார் 6 மணி நேரம் கோரத்தாண்டவமாடியது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 140 எக்ஸ்பிரஸ் ரயில்கள் உட்பட 233 ரயில்கள் ரத்து செய்யப்பட்டதால் பல் வேறு ரயில் நிலையங்களில் பயணிகள் பரிதவித்தனர். புவனேஸ்வர் விமான நிலையம் மூடப்பட்டதால் விமான போக்குவரத்தும் முடங்கியது.
தலைநகர் புவனேஸ்வர் உட்பட 52 நக ரங்கள் மற்றும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் மரங்கள், மின் கம்பங்கள், தொலைத்தொடர்பு கோபுரங்கள் முறிந்து விழுந்தன. அந்த நகரங்கள், கிராமங் களில் சாலை போக்குவரத்து முற்றிலு மாக முடங்கியது. பல்வேறு பகுதி களில் தொலைத்தொடர்பு சேவை துண் டிக்கப்பட்டது. 4 தொலைக்காட்சி சேனல் களின் ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது.
புரி மாவட்டத்தில் 2 பேர், கேந்திரபரா மாவட்டத்தில் ஒருவர், சாக்சிகோபால் மாவட்டத்தில் ஒருவர், நயாகர் மாவட் டத்தில் ஒருவர் உட்பட மொத்தம் 6 பேர் உயிரிழந்தனர். மரங்கள், மின் கம்பங்கள் முறிந்து விழுந்தது மற்றும் வீட்டுச் சுவர் இடிந்த சம்பவங்களில் 160 பேர் படுகாயம் அடைந்தனர்.
ஒடிசாவில் புயல் பாதித்த 14 மாவட் டங்களில் நேற்று மின் விநியோகம் துண்டிக்கப்பட்டது. இதில் 8 மாவட்டங் கள் முழுமையாக இருளில் மூழ்கியுள் ளன. பல ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு சேதம் ஏற்பட்டிருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
தேசிய பேரிடர் மீட்புப் படை, மாநில பேரிடர் மீட்புப் படை வீரர்கள் பலத்த மழையையும் பொருட்படுத்தாமல் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். கடலோர காவல் படை, கடற்படை வீரர்களும் மீட்புப் பணியில் உதவி செய்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுமார் 11.5 லட்சம் பேர் நிவாரண முகாம்கள், பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டதால் பெரும் உயிர்ச்சேதம் தடுக்கப்பட்டது.
ஆளுநர் மாளிகை தனித்தீவானது
ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் ஆளுநர் மாளிகை உள்ளது. ஃபானி புயலால் ஆளுநர் மாளிகைக்குச் செல்லும் சாலையில் மரங்கள் முறிந்து விழுந்தன. இதனால் ஆளுநர் மாளிகை தனித்தீவாக மாறியது. இதேபோல மாநில சட்டப்பேரவை மற்றும் தலைமைச் செயலகத்துக்குச் செல்லும் சாலையிலும் மரங்கள், மின் கம்பங்கள் முறிந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
புவனேஸ்வர் விமான நிலையத்தில் ஓடுபாதை, கட்டிடங்களில் பலத்த சேதம் ஏற்பட்டது. புவனேஸ்வர் ரயில் நிலையத்தில் மேற்கூரைகள் பெயர்ந்து விழுந்தன. புவனேஸ்வர் எய்ம்ஸ் மருத்துவமனை வளாகத்திலும் புயலால் பெரும் பாதிப்பு ஏற்பட்டது.
தலைநகர் புவனேஸ்வர் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் உள்ள பிரபல மருத்துவமனைகளில் புயலால் பெரும் சேதம் ஏற்பட்டது. அந்த மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருந்த 600 கர்ப்பிணிகள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
சுனாமியாக சீறிய கடல் அலைகள்
கடந்த 2013-ம் ஆண்டில் பிலிப் பைன்ஸ் நாட்டை ஹையான் என்ற பெரும்புயல் தாக்கியது. இதில் 7,500 பேர் பலியாகினர். இதில் பாதிக்கும் மேற்பட்டோர் கடல் அலை சீற்றத்தால் உயிரிழந் தனர். ஹையான் புயலின்போது மத்திய பிலிப்பைன்ஸ் பகுதியில் சுமார் 24.6 அடி உயரத்துக்கு அலைகள் எழுந்தன. இதன் காரணமாக கடலோர கிராமங்கள், நகரங்களில் கடல் நீர் புகுந்து சுமார் 3,500 பேர் உயிரிழந் தனர்.
ஒடிசாவை நேற்று ஃபானி புயல் தாக்கியபோது சுனாமி போன்று கடல் அலைகள் சீறின. பல அடி உயரத்துக்கு அலைகள் எழுந்தன. இதன்காரணமாக கட லோர கிராமங்களுக்குள் தண்ணீர் புகுந்தது. எனினும் முன்னெச் சரிக்கை நடவடிக்கையாக மக்கள் வெளியேற்றப்பட்டதால் பெரும் உயிரிழப்பு தடுக்கப்பட்டது.