அல்-காய்தா போன்ற இயக்கத்தின் மிரட்டலை எதிர்கொள்ள தேசம் தயாராக உள்ளது என்று இந்திய விமானப் படை தளபதி அரூப் ரஹா தெரிவித்துள்ளார்.
1956-ஆம் ஆண்டு பாகிஸ்தான் உடன் நடந்த போரில் இந்திய விமானப் படையின் பங்கு குறித்து நடைபெற்ற கருத்தரங்கில் கலந்து கொண்ட விமானப ்படை தளபதி அரூப் ரஹாவிடம், இந்தியாவுக்கான அல்-காய்தாவின் கிளை இயக்கம் தொடங்கப்பட்டதாக வெளியான மிரட்டல் வீடியோ குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு, "அல்-காய்தா போன்ற பயங்கரவாத போர்வையில் இருக்கும் இயக்கத்தின் மிரட்டலை எதிர்கொள்ள தேசம் தயார் நிலையில் உள்ளது" என்றார் அவர்.
இணையத்தில் வெளியான மிரட்டல் வீடியோ நம்பகத்தன்மையானது என்று உள்துறை அமைச்சகம் உறுதிப்படுத்திய நிலையில், இது குறித்து உளவுத்துறை உள்துறை அமைச்சகத்திடம் விரைவில் அறிக்கை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனிடையே, வீடியோவில் குறிப்பிடப்பட்ட மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் உஷார் நிலையில் இருக்கும்படி உள்துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.
அல்-காய்தாவின் வீடியோ வெளியீடு, இந்தியாவில் ஆள் சேர்க்கும் நடவடிக்கைகளுக்கான முயற்சியாக இருக்கலாம் என பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.