இந்தியா

காரை மறித்து ஜெய் ஸ்ரீ ராம் என முழங்கிய கும்பல்: சரமாரியாக திட்டி சவால்விட்ட மம்தா

செய்திப்பிரிவு

மேற்கு வங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மம்தா பானர்ஜி காரில் செல்லும் வழியில் குழுமியிருந்த சிலர் காரை மறித்து ஜெய் ஸ்ரீ ராம் என முழங்க ஆத்திரத்தில் அவர் காரிலிருந்து இறங்கி கோஷமிட்டவர்களை சரமாரியாக திட்டித்தீர்த்தார்.

டெல்லியில் நேற்று நடைபெற்ற பிரதமரின் பிரதமரின் பதவியேற்பு விழாவை மேற்கு வங்கம் மாநில முதல்வர் மம்தா பானர்ஜி புறக்கணித்தார். பதவியேற்பு விழா அரசியல் சாயம் பெறுவதால் புறக்கணிப்பதாகக் கூறியிருந்தார்.

அதே நேரத்தில் நேற்று அவர் உள்ளூரில் தர்ணா போராட்டத்தில் கலந்து கொண்டார்.

அதற்காக அவர் காரில் சென்று கொண்டிருந்தார்.  அப்போது, அவரது காரை வழிமறித்து சிலர் “ஜெய் ஸ்ரீ ராம்” என்று கோஷம் எழுப்பினர். தொடர்ந்து வழிவிடாமல் கோஷம் எழுப்பியவாரே இருந்தனர்.  மம்தா பானா்ஜி  பொறுமை இழந்து காரில் இருந்து இறங்கி அங்கே கூடியிருந்தவர்களைப் பார்த்து,

"இவர்கள் அனைவரும் யாரென்று எனக்குத் தெரியும். இவர்கள் வெளியில் இருந்து வந்தவர்கள். பாஜகவினர். இவர்கள் கிரிமினல்கள் அதனாலேயே என்னை அவமரியாதை செய்கின்றனர்.

இவர்களுக்கு எல்லாம் நான் சவால் விடுகிறேன். நான் அடித்தால் தாங்க மாட்டார்கள், மிதுன் சக்கரபர்த்தி திரைப்பட்டத்தில் வரும் வசனம் நினைவிருக்கிறதா? அதே வசனத்தை இப்போது என்னால் சொல்ல முடியாது. ஏனெனில் அதில் அவர் சவங்களைப் பற்றி பேசியிருப்பார்.

ஆனால், ஒன்று சொல்கிறேன். நான் இங்கு அடித்தால் நீதி வேறொரு இடத்தில் வழங்கப்படும்" என்றார். மிரட்டல் தொணியில் சொல்லிவிட்டு காரில் ஏறி புறப்பட்டுச் சென்றார்.

மேற்குவங்க தேர்தலில் மொத்தம் 22 தொகுதிகளில் பாஜக 18 தொகுதிகளைக் கைப்பற்றியது. மேலும், திரிணமூல் எம்.எல்.ஏ.க்கள் இருவரும், கவுன்சிலர்கள் 60 பேரும் தேர்தல் முடிவு வெளியானதற்குப் பின்னர் பாஜகவில் இனைந்தனர்.

இந்நிலையில், தன்னை நோக்கி ஜெய் ஸ்ரீ ராம் என்று சொல்லி வெறுப்பேற்றியவர்களை விளாசியிருக்கிறார் மம்தா.

இந்த மாதத்தில் மம்தா இவ்வாறாக பொறுமையிழந்து ஆவேசப்படுவது இது இரண்டாவது முறையாகும்.

SCROLL FOR NEXT