இந்தியா

அதிகம் தேடப்பட்ட அரசியல் தலைவர்களில் மோடி முதலிடம்; ராகுலை பின்னுக்குத் தள்ளிய பிரியங்கா

செய்திப்பிரிவு

யாஹூ இந்தியா வெளியிட்ட அதிகம் தேடப்பட்ட அரசியல் தலைவர்களின் பட்டியலில் பிரதமர் மோடி முதலிடத்தில் உள்ளார். அடுத்ததாக காங்கிரஸ் பொதுச் செயலாளர்களில் ஒருவரான பிரியங்கா காந்தி உள்ளார்.

இந்தியா முழுவதும் ஐந்து கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற்று வரும் சூழலில் யாஹூ இந்தியா, தன்னுடைய தேடுபொறியில், பயனாளிகள் அதிகம் தேடிப்பார்த்த அரசியல் தலைவர்களின் பட்டியலை இன்று (திங்கட்கிழமை) வெளியிட்டுள்ளது.

இதில் முதலிடத்தை மோடி பிடித்துள்ளார். இரண்டாவது இடத்தில் பிரியங்கா காந்தி உள்ளார். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி 3-வது இடத்திலும் ராகுல் காந்தி நான்காவது இடத்திலும் உள்ளனர்.

இந்தப் பட்டியலில் கிரிக்கெட்டராக இருந்து அரசியலில் நுழைந்த நவ்ஜோத் சிங் சித்துவும் இடம் பிடித்துள்ளார். அதேபோல மறைந்த கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளராக இருந்து அண்மையில் சிவசேனா கட்சியில் இணைந்த பிரியங்கா சதுர்வேதி ஆகியோரும் அதிகம் தேடப்பட்ட அரசியல் தலைவர்களின் பட்டியலில் உள்ளனர்.

மாணவர்களாக இருந்து போராட்டங்கள் மூலம் அரசியல் வாழ்வில் அடியெடுத்து வைத்த கன்னையா குமார், ஹர்திக் படேல் ஆகியோரும் இந்தப் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.

அதேபோல அரசியலில் புதுமுகங்களான முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர், முன்னாள் நடிகை ஊர்மிளா மடோன்கர் ஆகியோரும் அதிகம் தேடப்பட்டவர்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளதாக யாஹூ நிறுவனம் தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT