ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அர்விந்த் கேஜ்ரிவால் டெல்லி துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங்கை சந்தித்து, டெல்லியில் ஆட்சியமைக்க பாஜக தலைவர்கள் சிலர் பேரம் பேசியது தொடர்பான வீடியோ ஆதாரத்தை ஒப்படைத்தார். கேஜ்ரிவாலுடன் கட்சியின் மூத்த தலைவர் மனிஷ் சிசோதியாவும் சென்றார்.
டெல்லி சட்டப்பேரவையில் ஜன் லோக்பால் மசோதாவை நிறைவேற்ற முடியாததால் கடந்த பிப்ரவரி 14-ம் தேதி அர்விந்த் கேஜ்ரிவால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதனால், அங்கு பிப்ரவரி 17-ம் தேதி முதல் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலில் உள்ளது.
இதனைத் தொடர்ந்து, டெல்லியில் அடுத்த ஆட்சி அமைப்பது யார் என்ற சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில், டெல்லியில் ஆட்சியைக் கைப்பற்ற பாஜக குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக ஆம் ஆத்மி கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இதனை நிரூபிக்கும் வகையில், இரண்டு நாட்களுக்கு முன்னர் ஆம் ஆத்மி கட்சி வீடியோ ஆதாரத்தை வெளியிட்டது. டெல்லி பாஜக துணைத் தலைவர், ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ.வுடன் பேரம் பேசுவதாக அந்த காட்சிகள் அமைந்திருந்தன. இந்த வீடியோ ஆதாரம் டெல்லி அரசியலில் மீண்டும் சர்ச்சையை கிளப்பியது.
இத்தகைய நிலையில், இன்று ஆம் ஆத்மி தலைவர் அர்விந்த் கேஜ்ரிவால் இன்று டெல்லி துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங்கை சந்தித்தார். சந்திப்பின்போது, பேர காட்சிகள் அடங்கிய வீடியோ ஆதாரத்தை ஆளுநரிடம் அவர் சமர்ப்பித்தனர்.
அதுதவிர, டெல்லியில் ஆட்சி அமைக்க பாஜகவுக்கு அழைப்பு விடுப்பதற்கு அனுமதி கோரி, கடந்த 4-ம் தேதி டெல்லி ஆளுநர் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு எழுதிய கடிதத்தை மறு பரிசீலனை செய்யுமாறும் கேஜ்ரிவால் கேட்டுக் கொண்டுள்ளார்.
சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கேஜ்ரிவால்: "பாஜக தலைவர் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.வை விலைக்கு வாங்க ரூ.4 கோடி பணம் அளிக்க முன்வந்த வீடியோ ஆதாரத்தை ஆளுநரிடம் ஒப்படைத்துள்ளோம். கடந்த 4-ம் தேதி, ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு எழுதிய கடிதத்தை மறுபரிசீலனை செய்யுமாறும் வலியுறுத்தியுள்ளோம்" என்றார்.