வார்தா நகரில் ராகுல் காந்தி போட்டியிடும் வயநாடு குறித்து பிரதமர் மோடி பேசியதில் எந்தவிதமான விதிமுறை மீறலும் இல்லை என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உ.பி.யின் அமேதி தொகுதியிலும், கேரளாவின் வயநாடு தொகுதியிலும் போட்டியிடுகிறார். ஏப்ரல் 1-ம் தேதி மகாராஷ்டிர மாநிலம் வார்தா நகரில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, " காங்கிரஸ் கட்சி இந்துக்களை உதாசீனப்படுத்துகிறது, இந்த தேர்தலில் அவர்களை தண்டிக்க மக்கள் முடிவு செய்துவிட்டார்கள். இதனால், அந்த கட்சியின் தலைவர்கள் இந்துக்கள் பெரும்பான்மையாக இருக்கும் தொகுதியில் இருந்து சிறுபான்மையினர் பெரும்பான்மையாக இருக்கும் தொகுதியில் சென்று போட்டியிடுகிறார்கள்" என்று ராகுல் காந்தியை மறைமுகமாகக் குறிப்பிட்டுப் பேசினார்.
பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்குக் காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்தது. மோடியின் பேச்சு சமூகத்தில் இரு மதங்களுக்கு இடையே பிரிவினையை ஏற்படுத்தும் பேச்சு என்று காங்கிரஸ் கட்சி கண்டித்தது.
இது தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அகமது படேல், ஜெய்ராம் ரமேஷ், அபிஷேக் மனு சிங்வி, ரன்தீப் சுர்ஜேவாலா ஆகியோர் தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்தும், ஆதாரங்களை வழங்கியும் தலையிடக் கோரினர். பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இந்நிலையில், தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையிலான தேர்தல் ஆணையர்கள், தேர்தல் அதிகாரிகளிடம் இருந்து பெற்ற அறிக்கையை தீவிரமாக ஆய்வு செய்தனர். அந்த ஆய்வின் அடிப்படையில் பிரதமர் மோடியின் பேச்சில் எந்தவிதமான தேர்தல் விதிமுறை மீறலும் இல்லை என்று தெரிவித்தனர்.
இது தொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில், " மகாராஷ்டிர மாநில, தலைமைத் தேர்தல் அதிகாரி அளித்த அறிக்கையை ஆழ்ந்து ஆய்வு செய்தோம். அதில் பிரதமர் மோடி வார்தாவில் பேசிய பேச்சில், எந்தவிதமான தேர்தல் நடத்தை விதிமுறை மீறலும், மக்கள் பிரதிநிதித்துவச் சட்ட மீறலும் இல்லை. எந்தவிதமான விதிமுறை மீறலும் பிரதமர் மோடியின் பேச்சில் இல்லை" எனத் தெரிவிக்கப்பட்டது.