உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள தேஹ்ரி மாவட்டத்தில் பேருந்து ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து 16 பேர் பலியாகி 17 பேர் காயமடைந்தனர்.
பேருந்தில் 33 பேர் பயணம் செய்தனர். ஜுயல்கார் அருகே பேருந்து 300 அடி கிடுகிடு பள்ளத்தில் உருண்டது.
பள்ளத்தில் உருண்ட பேருந்தின் பாதி பகுதி உள்ளூர் நீரோடை ஒன்றில் மூழ்கியது. இந்த நீரோடை அலக்நந்தா நதியுடன் இணைவது என்பது குறிப்பிடத்தக்கது.
ஹரித்வாரிலிருந்து கர்ணப்பிரயாக் நோக்கி சென்று கொண்டிருந்த இந்தப் பேருந்து, ஓட்டுனரின் அலட்சியத்தினால் பள்ளத்தில் உருண்டிருக்கிறது. மற்றொரு வாகனத்தை முந்திச் செல்ல முயன்றபோது இந்த துர்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இந்த விபத்தினால் அதிர்ச்சியடைந்துள்ளதாகத் தெரிவித்த அம்மாநில முதல்வர் ஹரிஷ் ராவத், இறந்தோர் குடும்பத்திற்கு ரூ.1 லட்சமும், காயமடைந்தோர் குடும்பத்திற்கு ரூ.50,000 தொகையையும் நிவாரணமாக அறிவித்துள்ளார்.