மக்களவைத் தேர்தல் தொடர்பாக நடத்தப்பட்ட தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளில் கேரளாவில் காங்கிரஸ் கூட்டணி பெரும் வெற்றிபெறும் என தெரியவந்துள்ளது. ஆளும் இடதுசாரிக் கூட்டணிக்கு தோல்வி ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 11 முதல் மே 19 வரை 7 கட்டங்களாக தேர்தல் நடை பெறும் என்றும் வாக்கு எண்ணிக்கை மே 23-ம் தேதி நடை பெறும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி ஏப்ரல் 11-ம் தேதி முதல் 6 கட்டத் தேர்தல் நடந்து முடிந்தன. இறுதியாக 7-ம் கட்டத் தேர்தல் நேற்று நடந்தது.
7-ம் கட்டத் தேர்தலில் 60 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் பதிவானதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இரண்டு மாதங்களாக நடந்து வந்த தேர்தல் திருவிழா நேற்றைய வாக்குப்பதிவுடன் முடிவடைந்தது. வாக்கு எண்ணிக்கை 23-ம் தேதி நடைபெறுகிறது.இந்த நிலையில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் நேற்று வெளியாகின.
இதில், பாஜக கூட்டணி அதிகமான இடங்களில் வெற்றி பெறும் என பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் தெரிவித்துள்ளன. எனினும் தென் மாநிலங்களான தமிழகம் மற்றும் கேரளாவில் காங்கிரஸ் கூட்டணியே அதிகமான இடங்களில் வெற்றி பெறும் என கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
| நிறுவனம் | காங்கிரஸ் | இடதுசாரி | பாஜக |
| இந்தியா டுடே | 15- 16 | 3- 5 | 0-1 |
| நியூஸ் 18 | 7-9 | 11- 13 | 0-1 |
| டைம்ஸ் நவ் | 15 | 4 | 1 |
| மலையாள மனோரமா | 13 | 2 | 0 |
மலையாள மனோரமா நடத்திய கருத்துக் கணிப்பில் 5 தொகுதிகளில் இழுபறி நிலை இருப்பதாகவும், அதில் திருவனந்தபுரம் தொகுதியில் பாஜக வெற்றி பெற சற்று கூடுதல் வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.