இந்தியா

பாஜகவை கடுமையாக விமர்சித்த அமைச்சர் நீக்கம்: உ.பி. முதல்வரின் பரிந்துரையை ஏற்றார் ஆளுநர்

பிடிஐ

உத்தரப் பிரதேச மாநிலத்தில் தேர்தல் நேரத்தில் பாஜகவை கடுமையாக விமர்சித்த அமைச்சர் ஓம் பிரகாஷ் ராஜ்பரை அமைச்சரவையில் இருந்து நீக்க முதல்வர் ஆதித்யநாத் பரிந்துரை செய்தார். இதனை ஆளுநர் ஏற்றுக்கொண்டார்.

சுஹல்தேவ் பாரதிய சமாஜ் கட்சி (எஸ்பிஎஸ்பி) கட்சியின் தலைவர் ஓம் பிரகாஷ் ராஜ்பர். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக்கூட்டணியில் நீண்டகாலமாக இடம் பெற்றிருந்தார்.ஆனால், தேர்தல் நேரத்தில் தனக்கு உரிய பிரதிநிதித்துவத்தை பாஜக தரவில்லை என்று கூறி சலசலப்பை ஏற்படுத்தினார்.

மக்களவைத் தேர்தலில் உ.பி. மாநிலத்தில் தான் சொந்த சின்னத்தில் போட்டியிடுவதற்கு ராஜ்பர் பாஜகவிடம் கோரிக்கை வைத்தார். ஆனால், அதை ஏற்க பாஜக மறுத்துவிட்டது.

இதனால் ஆத்திரமடைந்த அமைச்சர் ராஜ்பர் பாஜகவை கடுமையாக தேர்தல் களத்தில் விமர்சித்து வந்தார். 19- ம் தேதி தேர்தலுக்குப் பின் மாநிலத்தில் சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கூட்டணிதான் வெற்றி பெறும்,  பாஜக படுதோல்வி அடையும் என்று பேசி வந்தார்.

மேலும், தன்னுடைய புரட்சியால், கலகத்தால் ஒரு இடத்தைக் கொடுக்க மறுக்கும் பாஜக 50 இடங்களைப் பறிகொடுக்கும் என்று விமர்சித்தார். வாக்கு கேட்டுவரும் பாஜகவினரை செருப்பால் அடியுங்கள் என்று மக்களிடம் ராஜ்பர் பேசினார். ராஜ்பரின் பேச்சு கூட்டணிக் கட்சியான பாஜகவுக்கு பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது.

மாநிலத்தில் பாஜக தலைமையிலான அரசில் அமைச்சராக இருந்துகொண்டு அந்தக் கட்சியைப் பற்றியே காட்டமாக, தரம்தாழ்ந்து விமர்சித்து வந்தது பாஜகவினரிடியை பெரும் அதிர்ச்சியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தி வந்தது.

இந்நிலையில், தேர்தல் முடிந்தவுடன், அமைச்சர் ராஜ்பரை அமைச்சரவையில் உடனடியாக நீக்க முதல்வர் ஆதித்யநாத்,ஆளுநர் ராம் நாயக்கிற்கு பரிந்துரை செய்து கடிதம் எழுதினார். அந்தப் பரிந்துரையை உடனடியாக ஏற்றுக்கொண்ட ஆளுநர், ராஜ்பரை அமைச்சர் பதவியில் இருந்து விடுவித்தார். மேலும் ராஜபர் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் பலர் அரசில் முக்கியப் பதவிகளில் இருந்து வருகின்றனர்.  அவர்களையும் நீக்கி முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

முதல்வர் ஆதித்யநாத்தின் அமைச்சரைவையில் தன்னை நீக்கிய உத்தரவு குறித்து ராஜ்பர் கூறுகையில், "முதல்வர் ஆதித்யநாத் முடிவை நான் வரவேற்கிறேன். நல்ல முடிவு எடுத்திருக்கிறார். அவர் அமைத்துள்ள சமூக நீதிக்குழு அறிக்கை குப்பையில்தான் சேரப்போகிறது. அதை அமல்படுத்த அவருக்கு நேரம் இருக்காது. அந்த அறிக்கையை விரைந்து செயல்படுத்த கேட்டுக்கொள்கிறேன்" எனத் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT