இந்தியா

ஜிஎஸ்டி வரி மோசடி செய்தவரை கைது செய்ய அதிகாரிகளுக்கு அதிகாரம் உண்டா?- மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

பிடிஐ

ஜிஎஸ்டி வரி மோசடி செய்தவர்களை கைது செய்ய ஜிஎஸ்டி அதிகாரிகளுக்கு அதிகாரம் இருக்கிறதா எனக் கேட்டு தொடரப்பட்ட மனுக்களை விசாரணைக்கு ஏற்ற உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

ஜிஎஸ்டி வரி மோசடி செய்தவர்களை கைது செய்ய ஜிஎஸ்டி அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக்கூறி பல நகரங்களில் கைது செய்யும் சம்பவங்கள் நடந்தன. சமீபத்தில் தெலங்கானாவில் ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு செய்த ஒருவரை அதிகாரிகள் கைது செய்ய முயன்றபோது  அவருக்கு முன்ஜாமீன் வழங்கியது நீதிமன்றம்.

ஆனால், இந்த வழக்கில் கடந்த 27-ம் தேதி தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், தெலங்கானா உயர் நீதிமன்றம் முன்ஜாமீன் அளித்ததை ரத்து செய்தது. இதனால், ஜிஎஸ்டி வரி மோசடி செய்தவர்களை கைது செய்ய அதிகாரிகளுக்கு  அதிகாரம் இருக்கிறதா எனும் கேள்வி எழுந்தது.

இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் கடந்த காலங்களில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன, புதிதாகவும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் மீதான விசாரணை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய், அனிருத்தா போஸ் ஆகியோர் முன் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் கூறுகையில்,  "மாநிலங்களில் இருக்கும் ஒவ்வொரு உயர் நீதிமன்றமும் ஒவ்வொரு விதமான நிலைப்பாடு எடுத்து ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு செய்தவர்களுக்கு முன் ஜாமீன் வழங்குகின்றன. ஆனால் நாங்கள் முன்பே கூறியதைப் போல, ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு செய்தவர்களை கைது செய்ய அதிகாரம் இருக்கிறதா என்பதை கேள்விக்கு உள்ளாக்க வேண்டியுள்ளது.

அதுமட்டுமல்லாமல் ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு வழக்கில் ஒருவருக்கு முன்ஜாமீன் வழங்கும்போது, நீதிமன்றங்கள் உச்ச நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவுகளை கருத்தில் கொள்ள வேண்டும்.இதுபோன்ற வரி ஏய்ப்பு வழக்குகளில் தனிநபர்களுக்கு பாதுகாப்பு அளிக்கக் கூடாது.

ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு செய்தவர்களை கைது செய்யும் அதிகாரம் அதிகாரிகளுக்கு இருக்கிறதா என்பது குறித்து விளக்கம் அளிக்க மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடுகிறோம் " எனத் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT