இந்தியா

அன்று சிந்தியாவுடன் செல்ஃபி எடுக்கமுடியாதவர் இன்று அவரையே வென்றார்: தேர்தல் ஆச்சர்யங்கள்

செய்திப்பிரிவு

சில ஆண்டுகளுக்கு முன் மூத்த காங்கிரஸ் தலைவர் ஜோதிராதித்ய சிந்தியாவுடன் செல்ஃபி எடுக்க முயன்று தோற்ற நபர், மக்களவைத் தேர்தலில் சிந்தியாவையே தோற்கடித்துள்ளார்.

நாட்டின் 17-வது மக்களவைத் தேர்தல் கடந்த மே 19-ம் தேதியுடன் முடிவடைந்தது. 7 கட்டங்களாக நடந்த இத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை மே 23-ம் தேதி நடந்து முடிந்தது. இதில் பாஜக 303 இடங்களில் வெற்றிபெற்று தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்தது.

நாட்டில் மோடிக்கு ஆதரவாக வீசிய அலையில், ஏராளமான காங்கிரஸ் தலைவர்கள் அடித்துச் செல்லப்பட்டனர். இதில் குறிப்பிடத்தக்கவர் முன்னாள் மத்திய அமைச்சரான ஜோதிராதித்ய சிந்தியா. மத்தியப் பிரதேசத்தில் தங்களுடைய குடும்பத் தொகுதியான குனாவில் சுமார் 1.25 லட்ச வாக்குகள் வித்தியாசத்தில் சிந்தியா தோற்கடிக்கப்பட்டுள்ளார்.

ஆரம்பத்தில் காங்கிரஸில் இருந்த கிருஷ்ண பால், கட்சியின் மாநிலத் தலைமை மீதான அதிருப்தியால் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலை அடுத்து பாஜகவில் இணைந்தார். பாஜகவில் இணைந்த அவருக்கு, மக்களவைத் தேர்தலில் சிந்தியாவை எதிர்த்துப் போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்பட்டது.

புதுமுகத் தலைவரான கிருஷ்ண பால், சிந்தியாவால் எளிமையாகத் தோற்கடிக்கப்படுவார் என்றே அரசியல் நோக்கர்களும் ஊடகங்களும் கணித்தனர். ஆனால் அனைவரின் ஊகங்களையும் பொய்யாக்கி, வெற்றி வாகை சூடியுள்ளார் கிருஷ்ண பால்.

சில வருடங்களுக்கு முன்பு ஜோதிராதித்ய சிந்தியாவுடன் செல்ஃபி எடுக்க முயன்ற கிருஷ்ணபால், இன்று பாஜக வேட்பாளராக சிந்தியாவையே தோற்கடித்ததை பாஜகவினர் கொண்டாடி வருகின்றனர். இதுதொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

SCROLL FOR NEXT