வாக்குகளை பிளவுப்படுத்தும் நோக்கத்துடன் 'லவ் ஜிகாத்' என்ற புரளி பரப்பப்படுவதை பிரதமர் நரேந்திர மோடி தடுத்து நிறுத்த வேண்டும் என்று மவுலானா மதானி கேட்டுக்கொண்டுள்ளார்.
தனியார் செய்தித் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த இஸ்லாமியத் தலைவரும், ஜாமியாத் உலேமா இ ஹிந்த் அமைப்பின் பொதுச் செயலருமான மவுலானா மசூத் மதானி, " 'லவ் ஜிகாத்' என்ற பெயரில் குறிப்பிடப்படும் ஒரு பிரச்சினையே நாட்டில் இல்லை. வாக்குகளை பிளவுப்படுத்த வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு இந்தப் பிரச்சாரம் நடத்தப்படுகிறது.
இதனை பிரதமர் நரேந்திர மோடி தலையிட்டு நிறுத்த வேண்டும். ஒருவேளை அப்படி ஒன்று நடந்திருந்தால் தவறு செய்தவர்களுக்கு கடுமையான தண்டனை அளிக்க வேண்டும்.
இந்தியாவில் இருக்கும் முஸ்லிம்களும் இந்துக்களும் வேறு மதத்திலோ அல்லது சாதியிலோ திருமணம் செய்து கொள்வதை விரும்பமாட்டார்கள்" என்றார்.
மேலும், இந்தியாவில் வாழ்பவர்கள் அனைவரும் இந்துக்கள் என்று பாஜகவினர் சிலர் கூறுவது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் பதில் அளிக்கும்போது, "இந்தியர் என்பதற்கு பொருளே இந்தி தான். ஆக இதில் யாருக்கும் எந்த பிரச்சினையும் இல்லை. இங்கு வாழும் முஸ்லிம்கள் இந்தி பேசுபவர்கள், கிருஸ்துவர்களும் இந்தி பேசுபவர்கள். இதற்கு இது தான் பொருள்" என்று குறிப்பிட்டார்.