இந்தியா

நாடாளுமன்றத்தில் நுழையும் 78 பெண் எம்.பி.க்கள்

செய்திப்பிரிவு

17-வது நாடாளுமன்றத் தேர்தலில் முதல் முறையாக அதிக எண்ணிக்கையில் பெண் எம்.பி.க்கள் தேர்வாகியுள்ளனர்.

பிரதமர் மோடி, அமித் ஷா தலைமையில் மக்களவைத் தேர்தலைச் சந்தித்த பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மாபெரும் வெற்றி பெற்று மீண்டும் 2-வது முறையாக மத்தியில் ஆட்சியைப்  பிடித்துள்ளது.

இதில் நாடாளுமன்றத்தில் மொத்தமுள்ள 542 எம்.பி.க்களில் இந்த முறை சுமார் 78  பெண் எம்.பி.க்கள் இந்தியா முழுவதிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள்.

இதில் அதிகபட்சமாக உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கத்திலிருந்து சுமார் 11 பெண் எம்.பி.க்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள்.

1952-லிருந்து பெண் எம்.பி.க்கள் அதிகம் தேர்ந்தெடுக்கப்பட்டது இந்த 17-வது நாடாளுமன்றத் தேர்தலில்தான். இதற்கு முன்னர் 15-வது நாடாளுமன்றத் தேர்தலில் 52 பெண் எம்.பி.க்களும், 16-வது நாடாளுமன்றத் தேர்தலில் 64 பெண் எம்.பி.க்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

சென்ற முறை நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டவர்களில் சோனியா காந்தி, கிரண் கெர், ஹேமமாலினி ஆகியோர் மீண்டும் தங்கள் பதவியைத் தக்க வைத்துள்ளனர்.

நட்சத்திர எம்.பி.க்களாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை அமேதியில் தோற்கடித்த ஸ்மிருதி இரானியும்,  போபாலில் முன்னாள் முதல்வர் திக் விஜய் சிங்கை தோற்கடித்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் சிறை தண்டனை பெற்ற பிரக்யாவும் உள்ளனர்.

மேலும் அதிக எதிர்பார்ப்புள்ள எம்.பி.க்களாக திமுகவின் கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன், காங்கிரஸின் ஜோதிமணி ஆகியோர் உள்ளனர்.

சுமார்  8,000க்கும் அதிகமான பெண் வேட்பாளர்கள் இந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டனர். இதில் அதிகபட்சமாக உத்தரப் பிரதேசத்திலிருந்து 104 பேர் போட்டியிட்டனர்ர்.  இதனைத் தொடந்து இரண்டாவது இடத்தில் மகாராஷ்டிராவும், தமிழகமும் உள்ளன.

மூன்றாவது இடத்தில் பிஹாரும், மேற்கு வங்கமும் உள்ளன.

SCROLL FOR NEXT