அமெரிக்க அதிபரின் அதிகாரபூர்வ விருந்தினர் மாளிகையில் பிரதமர் நரேந்திர மோடி தங்கவைக்கப் படவுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா செல்லவிருக்கிறார். செப்டம்பர் 29ஆம் தேதி வாஷிங்டன் செல்லும் போது அவர் அமெரிக்க அதிபரின் அதிகாரபூர்வ விருந்தினர் மாளிகையான பிளேர் ஹவுஸில் தங்கவிருக்கிறார். அமெரிக்க வரலாற்றில் முக்கியப் பங்குவகிப்பது பிளேர் ஹவுஸ் என்பது குறிப்பிடத்தக்கது.
அடல் பிஹாரி வாஜபாயி இந்த பெருமைக்குரிய அதிகாரபூர்வ அமெரிக்க அதிபர் விருந்தினர் மாளிகையில் தங்கவைக்கப்பட்ட பிறகு இப்போது மோடி அங்கு தங்கவிருக்கிறார்.
மன்மோகன் சிங் இதில் தங்கியதில்லை. அவர் தனது அமெரிக்க பயணங்களின் போது விடுதியில் தங்குவார்.
1824ஆம் ஆண்டு தனிப்பட்ட இல்லமாக கட்டப்பட்ட பிளேர் ஹவுஸ் அமெரிக்க அரசியல், ராஜீய, மற்றும் கலாச்சார வரலாற்றில் கடந்த 190 ஆண்டுகளாக முக்கியப் பங்கு வகிக்கும் மாளிகையாகும்.
அமெரிக்க அதிபர்களின் முக்கியத்துவம் வாய்ந்த அயல்நாட்டுக் கொள்கைகளில் பல இந்த பிளேர் ஹவுசில் முடிவெடுக்கப்பட்டவையே.
அமெரிக்க அரசின் விருந்தினர்கள் பலர் இந்த அதிகாராபூர்வ விருந்தினர் மாளிகையிலேயே தங்கியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. வெள்ளை மாளிகை உள்ள பென்சில்வேனியா அவென்யுவில் உள்ள இந்த பிளேர் ஹவுஸ் அமெரிக்க அரசினால் இரண்டாம் உலகப் போர் காலக்கட்டத்தில் வாங்கப்பட்டது.
இம்மாதம் 26ஆம் தேதி அமெரிக்கா செல்லும் மோடி அங்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் போலவே நியூயார்க் பேலஸ் விடுதியில் தங்குகிறார்.
மறுநாள் 9/11 பயங்கரவாதத் தாக்குதலுக்கு இலக்கான உலக வர்த்தக மையத்தை பார்வையிடுகிறார். அடுத்ததாக 9/11 மெமோரியல் மியூசியத்திற்கு வருகை தருகிறார்.
அதன் பிறகு ஐநா பொதுச் சபையில் மோடி உரையாற்றுகிறார். பிறகு நிறைய இருதரப்பு உறவுகள் குறித்த சந்திப்புகளை மேற்கொள்கிறார் மோடி.