உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டபின் ரவிந்திர ஜடேஜா தனது ட்விட்டர் பக்கத்தில் நான் பாஜகவுக்கு ஆதரவு தெரிவிக்கிறேன் என்று வெளிப்படையாக பதிவிட்டார்.
அதற்கு இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்ட ஜடேஜாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டரும், சிஎஸ்கே அணி வீரருமான ரவிந்திர ஜடேஜா குஜராத்தின் ஜாம்நகரைச் சேர்ந்தவர். இவரின் மனைவி ரிவாபா, கடந்த மாதம் 3-ம் தேதி ஜாம்நகரில் பாஜக எம்.பி. பூனம்பென் மாடம் முன்னிலையில் இணைந்தார்.
இந்நிலையில், ஜாம்நகர் மாவட்டம், கலாவட் நகரில் நேற்று முன்தினம் காங்கிரஸ் கட்சியின் பேரணி நடந்தது. அப்போது, ரவிந்தி ஜடேஜாவின் தந்தை அனிருதுசிங், சகோதரி நைனாபா ஆகியோர் பட்டிதார் சமூகத்தின் தலைவர் ஹர்திக் படேல் முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தனர்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் இரு வேறு கட்சியில் இணைந்தனர். அதாவது, ரவிந்திர ஜடேஜாவின் மனைவி பாஜகவிலும், அவரின் மாமனார் அதாவது ஜடேஜாவின் தந்தையும், அவரின் மகள் காங்கிரஸ் கட்சியிலும் சேர்ந்தது பெரும் வியப்பை ஏற்படுத்தி இருந்தது.
இந்நிலையில் உலகக்கோப்பைக்கான 15 வீரர்கள் கொண்ட இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. அதில் ரவிந்திர ஜடேஜா இடம் பெற்றுள்ளார். அதன்பின் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட ரவிந்திர ஜடேஜா, " நான் பாஜகவை ஆதரிக்கிறேன்" என்று வெளிப்படையாகத் தெரிவித்தார்.
இந்நிலையில், ஜடேஜா பாஜகவில் சேர்ந்ததைத் தொடர்ந்து, பிரதமர் மோடி, தனது ட்விட்டர் பக்கத்தில் ஜடேஜாவுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், " நன்றி ஜடேஜா, உலகக் கோப்பைப் போட்டியில் விளையாடும் இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டதற்கு ஜடேஜாவுக்கு வாழ்த்துக்கள்" என்று தெரிவித்துள்ளார்.
குஜராத்தில் உள்ள 26 மக்களவைத் தொகுதிகளுக்கும் 3-வது கட்டமாக வரும் 23-ம் தேதி நடக்கிறது குறிப்பிடத்தக்கது.