இந்தியா

பிரியங்கா பிரச்சாரத்தில் முக்கிய ‘தலை’கள் இல்லை

ஆர்.ஷபிமுன்னா

உ.பி.யில் காங்கிரஸின் பொதுச்செயலாளர் பிரியங்கா வத்ரா தீவிர தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார். இதில் அவருடன் கட்டாயம் இடம்பெற வேண்டிய உ.பி. காங்கிரஸ் தலைவர்கள் பலரையும் காண முடியவில்லை.

உ.பி.யின் மொத்தம் உள்ள 80 தொகுதிகளில் காங்கிரஸ் சில சிறிய கட்சிகளுடன் இணைந்து போட்டியிடுகிறது. இதன் வெற்றிக்காக பிரியங்கா தொடர்ந்து பயணம் செய்து பிரச்சாரம் செய்து வருகிறார். இவருடன் பிரச்சாரத்தில் இடம்பெற வேண்டிய முக்கியக் காங்கிரஸ் தலைவர்கள் இல்லாமலே பிரியங்கா தனித்து பிரச்சாரத்தில் உள்ளார். குறிப்பாக, உ.பி.யின் மேற்குப் பகுதி பொறுப்பை ஏற்ற பொதுச்செயலாளரான ஜோதிர்ஆதித்ய சிந்தியா பிரச்சாரத்தில் ஈடுபடவில்லை. இவர், கடைசியாக பிப்ரவரியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் பிரியங்காவுடன் லக்னோ வந்திருந்தார்.

அதன்பிறகு, டெல்லியில் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியில் இறங்கி விட்டார் சிந்தியா. இத்துடன் அவர் மத்தியபிரதேச மாநிலத்திலும் மக்களவை தேர்தலுக்கான வேட்பாளராக போட்டியிட உள்ளார். இதே மாநிலத்தில் சிந்தியாவின் மனைவியான பிரியதர்ஷினி ராஜேவும் காங்கிரஸுக்காக போட்டியிடுகிறார். இந்த இரண்டு தொகுதிகளின் பிரச்சாரப் பணியும் சிந்தியாவிடம் உள்ளது. எனவே, உ.பி.யின் மேற்குப் பகுதியில் சிந்தியாவால் இதுவரை பிரச்சாரம் செய்ய முடியவில்லை. அதன் எட்டு தொகுதிகளுக்கு வரும் ஏப்ரல் 11-ல் தேர்தல் நடைபெறுகிறது. இங்கு பிரச்சாரம் செய்யும் தேதியையும் சிந்தியா இன்னும் முடிவு செய்து அறிவிக்கவில்லை எனக் கருதப்படுகிறது.

இதேபோல், மக்களவைக்கான உ.பி. காங்கிரஸின் தேர்தல் பொறுப்பாளர் ராஜீவ் சுக்லாவும் பிரச்சாரத்திற்கு வரவில்லை. இவர் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் மட்டும் கலந்துகொள்ளத் தவறவில்லை எனத் தெரியவந்துள்ளது. உ.பி. மாநில காங்கிரஸ் தலைவரான ராஜ்பப்பரும் பிரியங்காவுடன் பிரச்சாரத்தில் இல்லை. இவர் ஆக்ராவின் அருகிலுள்ள பத்தேபூர் சிக்ரியில் போட்டியிடுவதால் அதன் பணியில் இறங்கிவிட்டார். உ.பி.யில் பகுஜன் சமாஜின் மாயாவதி, சமாஜ்வாதியின் அகிலேஷ்சிங் யாதவ் மற்றும் ராஷ்டிரிய லோக் தளத்தின் அஜித்சிங் ஆகியோரின் கூட்டணியில் காங்கிரஸ் சேர்க்கப் படவில்லை. ஏற்கெனவே, அதன் தாக்கத்தை உ.பி.யில் காங்கிரஸ் உணர்ந்து அவதிக்குள்ளாகி வருகிறது. இந்த நிலையில் பிரியங்கா மட்டும் செய்துவரும் தீவிர பிரச்சாரம் கைகொடுக்குமா? என உ.பி. காங்கிரஸார் கலங்கி வருகின்றனர் .

SCROLL FOR NEXT