நான் பிரதமராவேன் என்று கனவிலும் நினைத்துப் பார்க்கவில்லை என்று மோடி ஒரு தொலைக்காட்சி நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
பாலிவுட் நடிகர் அக்ஷ்ய குமாருடனான அந்த நேர்காணலில் அரசியல் கடந்து தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பிரதமர் பல்வேறு தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.
டெல்லியில் பிரதமர் இல்லத்தில் இந்த நேர்காணல் நடைபெற்றது. 3 கட்டத் தேர்தல்கள் முடிந்த நிலையில் இந்தப் பேட்டி அரசியல் பேட்டி அல்ல என்று கூறப்பட்டாலும்கூட அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகவே கருதப்படுகிறது.
அந்தப் பேட்டியின் சாராம்சம்:
நான் பிரதமராவேன் என்று கனவில்கூட நினைத்துப் பார்த்ததில்லை. ஏனெனில் எனது குழந்தைப் பருவத்தில் என் கிராமத்தைக் கடந்து நான் வேறு எதையுமே பார்த்ததில்லை. அப்புறம்தான் அந்தப் பயணம் தொடங்கியது. என் தேசம் என்னை இவ்வளவு தூரம் அழைத்து வந்திருக்கிறது. எனது குடும்பப் பின்னணியைப் பார்த்தால் மிகவும் எளிமையானது. ஒருவேளை எனக்கு ஒரு நல்ல வேலை கிடைத்திருந்தால் அதுவே பெரிது எனக் கருதி என் அன்னை அடுத்த வீடுகளுக்கு வெல்லம் கொடுத்துக் கொண்டாடியிருப்பார். என்னைப் பொறுத்தவரை பிரதமராக இருப்பது என்பது மிகவும் செயற்கையாகவே இருக்கிறது. எனது பின்னணி சமகால அரசியலுடன் ஒத்துப்போகாததே அதற்குக் காரணம். ஆனால், எனக்கு இத்தனை பேர் மரியாதை தருவதும் என்னை இவ்வளவு மக்கள் ஆதரிப்பதும் ஆச்சரியத்தையே தருகிறது.
உறவுகள் எல்லாம் மாயை:
இவ்வளவு பெரிய வீட்டில் தனியாக இருக்கும்போது எப்போதுமே தனிமையை உணர்ந்ததில்லையா என்று அக்ஷய் குமார் கேட்க, "நான் மிகச் சிறிய வயதிலேயே எல்லாவற்றையும் துறந்தேன். அந்தச் சிறு வயதில் வீட்டை விட்டு வெளியேறியபோது சிறிது காலம் அந்த உறவுகளைச் சுற்றி கவலை இருந்தது. ஆனால் அதன் பின்னர் அப்படி ஓர் உணர்வு ஏற்படவில்லை. எந்தவிதமான நெருக்கமும் பிணைப்பும் மாயையே. அப்படிப்பட்ட பயிற்சி தான் எனக்கு வழங்கப்பட்டது" என்றார்.
இந்த நாடே எனது குடும்பம்...
அவர் மேலும் பேசும்போது, "என் தாயுடன் ஏன் நான் இல்லை என்று கேட்கிறீர்கள். ஆனால் என் தாயை நான் அழைத்தபோது உன் வீட்டில் நான் என்ன செய்வேன் என்றே கேட்டார். உன்னிடம் என்ன பேசுவேன் என்று கேட்டார். மேலும், நான் அலுவல் நிமித்தங்களாக இரவு தாமதமாக வீடு திரும்புவதைப் பார்த்தால் அவர் வருத்தப்படுவார்.
என் குடும்பத்துக்கு என அரசாங்கப் பணத்தை நான் செலவழிப்பதே இல்லை. என் அம்மா என்னிடம் பணம் கேட்டதும் இல்லை. நான் கொடுத்ததும் இல்லை. ஆனால், நான் அவரைச் சந்திக்கும்போதெல்லாம் அவர் எனக்கு ஒண்ணேகால் ரூபாய் தருவார். அதற்காக எனக்கு என் அன்னை மீது ஈடுபாடு இல்லை என்று அர்த்தமில்லை. எனது வாழ்க்கையின் அர்த்தமே இந்த நாடுதான். இந்த நாடே எனது குடும்பம். அப்படித்தான் நான் இயங்குகிறேன்" எனக் கூறினார்.
இனிப்புகளும், குர்தாக்களும் அனுப்புவார் மம்தா
இதை நான் ஏன் தேர்தல் வேளையில் சொல்கிறேன் என நினைக்கலாம். ஆனால், இதை நான் சொல்லியே ஆக வேண்டும்.
எனக்கு எதிர்க்கட்சிகளிலும் நிறைய நண்பர்கள் இருக்கின்றனர். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி எனக்கு தனிப்பட்ட முறையில் இனிப்புகளும் குர்தாக்களும் அனுப்புவார். எதிர்க்கட்சியினருடன் நான் உணவு அருந்தியிருக்கிறேன்.
நீண்ட நாட்களுக்கு முன்னர், அப்போது நான் குஜராத் முதல்வராகக்கூட ஆகவில்லை. ஒரு முறை நாடாளுமன்றம் வந்தேன். அப்போது என்னுடன் காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் நன்றாகப் பேசினார். நாங்கள் வெளியே வந்தபோது பத்திரிகையாளர்கள் சிலர் நீங்கள் எப்படி ஆசாத்துடன் நண்பராக இருக்க முடியும்? நீங்கள் ஆர்.எஸ்.எஸ்.காரராயிற்றே என்றனர். அதற்கு குலாம் நபி நல்ல ஒரு பதிலைக் கொடுத்தார். வெளியே இருப்பவர்கள் நினைப்பதுபோல் நாங்கள் இங்கே அமைப்புகளில் இருப்பவர்கள் இருப்பதில்லை. நாங்கள் எல்லோரும் ஒரு குடும்பம் என்றளவில் இணைந்திருக்கிறோம். அதனை வெளியில் இருக்கும் உங்களால் யூகிக்க முடியாது என்று கூறினார்.
அதேபோல் மம்தா ஜி எனக்கு ஆண்டுக்கு இரண்டு குர்தாக்களாவது அனுப்பிவிடுவார். வங்கதேசப் பிரதமர் ஷேக் ஹசீனா ஆண்டுக்கு இரு முறையேனும் எனக்கு தனிச்சிறப்பான இனிப்பு வகைகளை அனுப்புவார்.
கோபம் வந்தால் எழுதிக் கிழித்துவிடுவேன்
உங்களுக்கு கோபம் வந்தால் எப்படிச் சமாளிப்பீர்கள் என அக்ஷய் குமார் கேட்டார். அதற்கு மோடி, "இவ்வளவு ஆண்டுகளில் என் கோபத்தை வெளிப்படுத்தாதவாறு நான் என்னையே நெறிப்படுத்தியிருக்கிறேன். கோபம் ஏற்படும் சூழலிலும்கூட எப்படி சிறப்பாக இயங்கி மற்றவர்களை ஊக்குவிக்க முடியும் என்றே முயற்சிப்பேன். ஆனால், நான் கடுமையாக நடந்து கொள்வேன். கடுமை காட்டுவது. வேறு கோபம் வேறு. அதனால் எனக்கு கோபம் வராது. கோபம் என்பது எதிர்மறை விளைவுகளுக்கு இட்டுச் செல்லும்.
கோபம் அடுத்தவர்களை துன்பப்படுத்தச் செய்யும். எனது கட்டுப்பாட்டையும் மீறி ஏதாவது அசவுகரியமானது நடந்தால் நான் அதனை ஒரு சிறு காகிதத் துண்டில் எழுதுவேன். பின்னர் அந்தக் காகிதத்தைக் கிழித்துவிடுவேன். எனக்கு அமைதி ஏற்படும்வரை இதையே மீண்டும் மீண்டும் செய்வேன். இப்படிச் செய்வதன் மூலம் எனது கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொள்வேன்" எனக் கூறினார்.
ஒபாமா என்னிடம் எப்போதும் கேட்கும் கேள்வி
அமெரிக்க அதிபர் ஒபாமாவுடனான தனது உறவு குறித்துப் பேசிய பிரதமர் மோடி, "நானும் ஒபாமாவும் சந்தித்தபோது எனது ஓய்வு நேரங்கள் பற்றி நான் பேசிக் கொண்டிருந்தேன். அப்போது அவர் என்னிடம் நீங்கள் ஏன் இவ்வளவு குறைவான நேரம் உறங்குகிறீர்கள் எனக் கேள்வி எழுப்பினார். மேலும் நான் வேலைமீது போதை கொண்டிருப்பதாகவும் என்னை நானே துன்புறுத்திக் கொண்டிருப்பதாகவும் கூறினார். அதன் பின்னர் நாங்கள் எப்போது சந்தித்தாலும் அவர் என்னிடம் நான் எனது தூங்கும் நேரத்தை அதிகப்படுத்திவிட்டேனா என்றே கேட்பார்" என மோடி தெரிவித்தார்.
என்னுடைய பிக்கி பேங்க்..
அரசியல் சார்பற்றது எனக் கூறப்பட்ட இந்த நேர்காணலில் பிரதமர் மோடி தனது இளமைக் காலத்தில் தன்னிடம் இருந்த பிக்கி பேங்க் உண்டியல் பற்றியும் பேசியுள்ளார்.
"எனது இளமைக் காலத்தில் எனக்கு வங்கிக் கணக்கு கிடையாது. நான் பள்ளியில் இருந்தபோது தேனா வங்கியில் இருந்து வந்தவர்கள் எங்கள் அனைவருக்கும் உண்டியல் கொடுத்துச் சென்றனர். ஆனால், அதில் என்னால் போதிய அளவு பணம் சேர்க்க இயலவில்லை. அதனால் வங்கி அதிகாரிகள் அந்தக் கணக்கை முடக்கினார்கள். 32 ஆண்டுகளுக்குப் பின்னர் எனக்கு சிறு வயதிலிருந்தே தேனா வங்கியில் கணக்கு இருந்ததாகச் சொன்னார்கள். நான் முதல்வரான பின்னர் எனது வங்கிக் கணக்கில் சம்பளம் விழும். நான் அதனை தேவைப்படுபவர்களுக்கு கொடுக்குமாறு கூறுவேன். என் மீது நிறைய வழக்குகள் இருந்ததால் எனக்குத் தேவைப்படும் என என்னைச் சுற்றியிருந்தவர்கள் கூறினார்கள். ஆனாலும் நான் எனது வங்கிக் கணக்கில் இருந்த ரூ.21 லட்சத்தை ஏழை எளிய மக்களுக்கு கொடுப்பதில் உறுதியாக இருந்தேன்" என்றார் மோடி.
நான் ஒரு நாடோடி..
"நான் ஒரு நாடோடி போல் சுற்றவே அதிகம் விரும்பியிருக்கிறேன். அப்படிச் சுற்றியதன் மூலம் நான் என்னுள் எழுந்த நிறைய கேள்விகளுக்கு விடை பெற்றிருக்கிறேன். எனது இளமைக்காலத்திலிருந்தே தனித்தே இருந்துள்ளேன். அது எனக்கொருவித பற்றின்மையை நல்கியது" என்று வெளிப்படையாகக் கூறினார் பிரதமர் மோடி.
காந்தியைப் பிடிக்கும்..
அவர் மேலும் கூறும்போது, "நான் மகாத்மா காந்தியால் எப்போதும் ஈர்க்கப்பட்டேன். எனக்குத் தூய்மை மீதான ஈடுபாடு அவரிடமிருந்தே வந்தது. நாட்டின் சுற்றுலாவை மேம்படுத்த வேண்டுமென்றால் தூய்மையை மேம்படுத்த வேண்டும். அந்த வகையில் நாட்டில் 9 கோடி கழிவறைகள் கட்டப்பட்டிருப்பது எனது சாதனை அல்ல தேசத்தின் சாதனை" என்றார்.
கேலி செய்த பிரதமர் உடனே பதிலளித்த ட்விங்கிள்...
இந்தப் பேட்டியை எடுத்த அக்ஷய் கானின் மனைவி ட்விங்கிள் கன்னா பிரதமர் மோடி தலைமையிலான அரசை பலமுறை விமர்சித்திருக்கிறார்.
குறிப்பாக 2017-ல் சானிட்டரி பேட் மீதான வரி விதிப்பினைக் கண்டித்து மோடி அரசை காத்திரமாக விமர்சித்தார். இதனைக் கருத்தில் கொண்ட பிரதமர், "ட்விட்டரில் நான் உங்களையும் உங்கள் மனைவியையும் பின் தொடர்கிறேன். அவர் என்னைக் குறிவைத்து விமர்சிப்பதை வைத்துச் சொல்கிறேன். உங்கள் குடும்பத்தில் எப்போதும் அமைதி நிலவும். ஏனென்றால் ட்விங்கிள் அவரது ஒட்டுமொத்த கோபத்தையும் என் மீது திருப்பிவிடுகிறாரே" என்று விளையாட்டாக கிண்டல் தொனியில் கூற அதற்கு ட்விங்கிள் கன்னா உடனே தனது ட்விட்டரில் பதிலும் கூறியுள்ளார். "இதை நான் நேர்மறையாகவே எதிர்கொள்கிறேன். இதன் மூலம் பிரதமர் எனது இருப்பை உணர்ந்திருக்கிறார் என்பதை உறுதி செய்ததுடன். எனது எழுத்துக்களை வாசிக்கிறார் என்பதையும் உறுதிப்படுத்தியிருக்கிறார்" என்றார்.
மீம்ஸ் பிடிக்கும்..
சமூக வலைதளங்களைப் பற்றிப் பேசிய பிரதமர் மோடி, "எனக்கு மீம்ஸ் பிடிக்கும். சில நேரங்களில் ட்விட்டர் மீம்ஸ்கள் மகிழ்ச்சியளிக்கின்றன. அதில் நான் மோடி என்ற தனி நபரைப் பார்ப்பதில்லை. அந்த மீம்ஸ் உருவாக்கப்பட்டதன் பின்னணியில் இருக்கும் திறமையைப் பார்க்கிறேன். சமூக வலைதளங்களின் மிகப்பெரிய சவுகரியமே அவை நமக்கு சாமானியர்களின் மனநிலையைப் பிரதிபலிக்கிறது என்பதே" என மோடி கூறினார்.