இந்தியா

ஒருவாரத்தில் 20 மாணவர்கள் தற்கொலை: 11,12-ம் வகுப்பு தேர்வு முடிவுகளில் குழப்பத்தால் தெலங்கானா அரசு அவசர நடவடிக்கை

ஐஏஎன்எஸ்

தெலங்கானா மாநிலத்தில் 11-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு அரசுத் தேர்வு முடிவுகள் வெளியானபின், கடந்த வாரத்தில் மட்டும் 20 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர்.

கடந்த வாரம் வரை 19 மாணவ, மாணவிகள் தற்கொலை செய்த நிலையில், இன்று நாராயன்பேட்டையில் ஒரு மாணவி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். விலங்கியல் பாடத்தில் தோல்வி அடைந்ததால், அந்த மாணவி மனதளவில் சோர்வடைந்திருந்தநிலையில், இந்த தவறான முடிவை எடுத்துள்ளார்.

இதையடுத்து, தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களின் தேர்வுத்தாளை இலவசமாக மறுமதிப்பீடு செய்ய முதல்வர் கே.டி.சந்திரசேகர் ராவ் உத்தரவிட்டுள்ளார்.

தி போர்ட் இன்டர்மீடியேட் எஜுகேஷன்(பிஐஇ) அதாவது 11-வது மற்றும் 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் கடந்த 18-ம் தேதி வெளியாகின. இந்த தேர்வை ஏறக்குறை. மாநிலம் முழுவதும் 9.74 லட்சம் மாணவ,மாணவிகள் எழுதிய நிலையில், அதில் 3.28 லட்சம் மாணவர்கள் தோல்வி அடைந்தனர்.

ஏராளமான மாணவ, மாணவிகள் தேர்வில் தோல்வி அடைந்ததால், விரக்தியில் நாள்தோறும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில்மாணவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் நிகழ்வுகள் அதிகரிக்கத் தொடங்கின. ஒருவாரத்தில் 19பேர் தற்கொலை செய்துகொண்ட நிலையில், மாநிலத்தில் அரசியல் கட்சிகள், மாணவர்களின் பெற்றோர்கள் , மாணவர்கள் அமைப்பினர் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தத் தொடங்கினார்கள்.

நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த முதல்வர் சந்திரசேகர் ராவ், தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களின் தேர்வுத்தாளை கட்டணமின்றி மறுமதிப்பீடு செய்ய உத்தரவிட்டார். மேலும், இந்த தேர்வில் தோல்வி அடைவதால் வாழ்க்கை முடிந்துவிடுவதில்லை, மாணவர்கள் நம்பிக்கை இழந்துவிடக்கூடாது என்று முதல்வர் வேண்டுகோள் விடுத்தார்.

மேலும், 11,12-ம் வகுப்பில் மாணவர்கள் தேர்ச்சி ஏன் குறைந்தது என்பதை ஆய்வு செய்ய 3 உறுப்பினர்கள் கொண்ட குழுவை தெலங்கானா அரசு அமைத்தது. தெலங்கானா தேர்வுகளை நடத்துவதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட தனியார் நிறுவனமான குளோபரீனா டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் செயல்பாடுகளை அந்த குழுவினர் ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை தர உள்ளனர். மேலும் எதிர்காலத்தில் தேர்வுகளை எவ்வாறு நடத்த வேண்டும் என்பதற்கான பரிந்துரைகளையும் அளிப்பார்கள்.

இதுகுறித்து பிஐஏ செயலாளர் ஏ. அசோக் கூறுகையில், " தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களின் மதிப்பெண்களை மறுமதிப்பீடு செய்யும் பணிகள் 12 மையங்களில் நடந்து வருகிறது. இதில் 5 மையங்கள் தலைநகர் ஹைதராபாத்தில் உள்ளன. ஒவ்வொரு மையம் நாள் ஒன்றுக்கு 70 ஆயிரம் முதல் 1.20லட்சம்  தேர்வுத்தாள்கள் மறுமதிப்பீடு செய்யப்படுகிறது.

மாணவர்களிடம் இருந்து எந்தவிதமான விண்ணப்பங்களும் இன்றி தோல்வி அடைந்த மாணவர்களின் தேர்வுத்தாள்கள் மறுமதிப்பீடு செய்யப்பட்டு இதுவரை 50 ஆயிரம் மாணவர்களை தேர்ச்சி பெற வைத்துள்ளனர் " எனத் தெரிவித்தார்.

மாநில அரசு நடவடிக்கை எடுத்தாலும், மாணவர்கள், மாணவர்களின் பெற்றோர், மாணவர்கள் அமைப்பினர் தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை அலுவலகத்தின் முன்போராட்டம் நடத்தி வருகின்றனர். மாணவர்களுக்கு எழுந்துள்ள அனைத்து சந்தேகங்களையும், தீர்க்க வேண்டும், தேர்வு முறைகளை வெளிப்படைத்தன்மையுடையதாக மாற்றவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

SCROLL FOR NEXT