ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி, ஆந்திரா மக்களவைத் தேர்தல், சட்டப்பேரவை தேர்தல் குறித்து தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்குப் பேட்டி அளித்துள்ளார். அதில் தொங்கு நாடாளுமன்றமானால் யாருக்கு ஆதரவு என்பது பற்றி கருத்து தெரிவித்தார்.
மேலும் 2014 தேர்தலுக்கும் 2019 தேர்தலுக்கும் உள்ள வித்தியாசம் பற்றி அவர் கூறும்போது, அதிருப்திக்கும் நம்பிக்கைக்கும் உள்ள வேறுபாடு என்றார்.
2014 தேர்தலுக்கும் 2019 தேர்தலுக்கும் உள்ள வேறுபாடு என்னவென்று நீங்கள் உங்கள் பார்வையில் கருதுகிறீர்கள்?
2014ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கும் எங்களுக்கும் இடையிலான வாக்குப் பகிர்வு இடைவெளி 1% மட்டுமே. எங்களுக்கு 44.5% , தேஜகூவுக்கு 45.1%. சந்திரபாபு நாயுடுவுக்கு எதிராக அதிருப்தி அலை அவ்வளவாக இல்லை. அதனால் அவர் தன் பொய்களின் மூலம் தக்க வைக்க முடிந்தது. இதனுடன் மோடி எனும் கனவும் சேர்ந்தது. இதோடு ஜனசேனா (பவன் கல்யாண்) காரணியும் இணைந்தது.
புதிதாக உருவான மாநிலத்தில் முதல்வராக 9 ஆண்டுகள் சந்திரபாபு நாயுடு இருந்த அனுபவம் அவருக்குக் கூடுதல் சாதகங்களை அளித்தது. இவையெல்லாம்தான் 2014-ல் அந்த 1% வாக்கு விகித வித்தியாசத்தின் பலனை அவர்களுக்கு அளித்தது.
ஆனால் இன்றைய தினம் நாயுடு அரசின் ஆட்சியை மக்கள் பார்த்து விட்டார்கள், புரிந்து கொண்டு விட்டார்கள். அவர் பொய் கூறினார் என்பதும், வாக்குற்திகளை அவரால் காப்பாற்ற முடியவில்லை என்பதையும் மக்கள் புரிந்து கொண்டுள்ளனர். இப்போது மோடி அலையும், கனவும் தீர்ந்து போய் விட்டது.
ஆகவே இந்தத் தேர்தல் ஒருவகையில் 2014 போல் அல்ல, மாறாக அதிருப்திக்கும் நம்பிக்கைக்கும் இடையே நடக்கும் வாக்குப் பதிவாக இருக்கும்
என்று அவர் அந்தப் பேட்டியில் பதிலளித்தார்.