இந்தியா

பிரபல பாலிவுட் நடிகர் சன்னி தியோல் பாஜகவில் இணைந்தார்: மீண்டும் மோடி ஆட்சி தேவை

பிடிஐ

நடிகர் தர்மேந்திராவின் மகனும், பாலிவுட் நடிகருமான சன்னி தியோல் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், பியூஷ் கோயல் முன்னிலையில் இன்று பாஜகவில் இணைந்தார்.

தர்மேந்திராவின் மனைவியும், சன்னி தியோலின் சித்தியுமான ஹேமமாலினி மதுரா தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் சன்னி தியோல் கடந்த வாரம் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவை புனே விமானநிலையத்தில் சந்தித்துப் பேசினார். அந்தச் சந்திப்பைத் தொடர்ந்து சன்னி தியோல் இன்று பாஜகவில் இணைந்தார். இவருக்கு பஞ்சாபில் உள்ள குருதாஸ்பூர் தொகுதியில் போட்டியிட பாஜக சார்பில் வாய்ப்பு வழங்கப்படலாம் எனத் தெரிகிறது. குருதாஸ்பூர் தொகுதி எம்.பி.யாக இருந்த நடிகர் வினோத் கண்ணா மறைந்த நிலையில் இவருக்கு அந்த வாய்ப்பு வழங்கப்படலாம்.

சன்னி தியோல் கடந்த 1997-ம் ஆண்டு நடித்த வெளிவந்த 'பார்டர்' திரைப்படம் சக்கைபோடு போட்டது. இதுதவிர 'காயல்', 'கதார் ஏக் பிரேம் கதா', 'டாமினி' ஆகிய திரைப்படங்கள் சன்னி தியோலுக்குப் பெரும் பெயரைப் பெற்றுக்கொடுத்தன. கடைசியாக 'மொகாலா ஆசி' எனும் திரைப்படம் வாரணாசியை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டது. அந்த திரைப்படத்தில் கரசேவராக சன்னி தியோல் நடித்திருந்தார்.

புதுடெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், பியூஷ் கோயல் ஆகியோர் முன்னிலையில் இன்று பாஜகவில் சன்னி தியோல் தன்னை இணைத்துக்கொண்டார்.

இது தொடர்பாக சன்னி தியோல் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், "என்னுடைய தந்தை தர்மேந்திரா, முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயுடன் நெருக்கமாக இருந்தவர். அதனால், நான் இப்போது மோடிஜியுடன் இணைந்துவிட்டேன்.  அடுத்த 5 ஆண்டுகளுக்கு மோடி ஆட்சி தேவை. பாஜக குடும்பத்துக்கு என்ன முடியுமோ அதைச் செய்வேன். நான் அதிகம் பேச விரும்பவில்லை. செயலில் காட்ட விரும்புகிறேன்" எனத் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT