இந்தியா

மகாராஷ்டிர முதல்வர் பிருத்விராஜ் சவாண் ராஜினாமா

செய்திப்பிரிவு

மகாராஷ்டிர முதல்வர் பிருத்விராஜ் சவாண் தனது பதவியை நேற்று ராஜினாமா செய்தார்.

மகாராஷ்டிரத்தில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. சட்டசபை தேர்தல் தொகுதிப் பங்கீடு விவகாரத்தால் இந்த கூட்டணி முறிந்து, அரசுக்கு அளித்து வந்த ஆதரவை தேசியவாத காங்கிரஸ் வாபஸ் பெற்றது.

இதைத் தொடர்ந்து, போதிய பெரும்பான்மை இல்லாத காங்கிரஸ் அரசை பதவி நீக்கம் செய்துவிட்டு குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று பாஜக வலியுறுத்தியது. இதுதொடர்பாக பாஜக மூத்த தலைவர் ஏக்நாத் கட்சே ஆளுநர் வித்யாசாகர் ராவை நேற்று சந்தித்து மனு அளித்தார்.

இதனிடையே முதல்வர் பிருத்வி ராஜ் சவாண் நேற்று மாலை ஆளுநரை சந்தித்துப் பேசினார். அப்போது அவர் தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் அளித்தார். இந்தத் தகவலை ஆளுநர் மாளிகை வட்டா ரங்கள் உறுதி செய்துள்ளன.

பிருத்விராஜ் சவாணை தொடர்ந்து காபந்து முதல்வராக நீடிக்கச் சொல்வதா அல்லது குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த பரிந்துரை செய்வதா என்பது குறித்து சட்ட நிபுணர்களுடன் ஆளுநர் வித்யாசாகர் ராவ் ஆலோசனை நடத்தி வருகிறார்.காபந்து முதல்வராக நீடிக்கக் கோரி ஆளுநர் மாளிகை தரப்பில் இருந்து இதுவரை எந்த தகவலும் வரவில்லை என்று பிருத்விராஜ் சவாணுக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அக்டோபர் 15-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற்று புதிய அரசு பதவியேற்கும் வரை மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படலாம் என்று தெரிகிறது.

SCROLL FOR NEXT