இந்தியா

பிரதமர் மோடியின் ஹெலிகாப்டரை சோதனையிட்ட ஐஏஎஸ் அதிகாரி சஸ்பெண்டுக்கு தடை; தீர்ப்பாயம் அதிரடி: தண்டனை கோரும் தேர்தல் ஆணையம்

செய்திப்பிரிவு

பிரதமர் மோடி பயணித்த ஹெலிகாப்டரை சோதனையிட்ட தேர்தல் பார்வையாளரை தேர்தல் ஆணையம் சஸ்பெண்ட் செய்த நிலையில் அந்த சஸ்பெண்ட் உத்தரவை மத்திய நிர்வாகத் தீர்ப்பாயம்  நிறுத்தி வைத்துள்ளது.

இதையடுத்து, நேற்று இரவு சஸ்பெண்ட் உத்தரவை திரும்பப் பெற்ற தேர்தல் ஆணையம், தேர்தல் அதிகாரி முகமது மோசினை மீண்டும் கர்நாடக மாநிலத்துக்கு அனுப்ப உத்தரவிட்டது.

அதுமட்டுமல்லாமல் கடமையில் கவனக்குறைவாக இருந்தமைக்காக அவர் மீது நடவடிக்கை எடுக்க கர்நாடக அரசுக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரைத்துள்ளது.

கடந்த 1996-ம் ஆண்டு கர்நாடக ஐஏஎஸ் பேட்ஜைச் சேர்ந்தவர் முகமது மோசின். தேர்தல் அதிகாரியாக சம்பல்பூரில் நியமிக்கப்பட்டிருந்தார்

பிரதமர் மோடி கடந்த 16-ம் தேதி ம்க்களவைத் தேர்தல் பிரச்சாரத்துக்குச் சென்றிருந்த நிலையில் மோடி பயணித்த ஹெலிகாப்டர் தேர்தல் நடத்தை விதிமுறைகள் ஏதேனும் மீறியிருக்கிறதா என்பதை அறிய அதிகாரி முகமது மோசின் சோதனையிட்டார்.

பிரதமர் மோடியின் சிறப்பு பாதுகாப்புப் பிரிவினரை மீறி இந்தச் சோதனையை முகமது மோசின் செய்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, மாவட்ட ஆட்சியர், போலீஸ் டிஐஜி ஆகியோர் தேர்தல் ஆணையத்திடம் முகமது மோசின் குறித்து புகார் தெரிவித்தனர்.

இதையடுத்து தேர்தல் பார்வையாளர் முகமது மோசினை சஸ்பெண்ட் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்தது. அதில், "தேர்தல் பார்வையாளர் முகமது மோசின் தேர்தல் ஆணையம் பிறப்பித்த விதிமுறைகளைப் பின்பற்றி நடக்கவில்லை. குறிப்பாக சிறப்பு பாதுகாப்புப் பிரிவினரைக் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

பிரதமர் மோடியின் ஹெலிகாப்டரைச் சோதனையிட்டது தேர்தல் விதிமுறைக்கு முரணானது. குறிப்பாக சிறப்பு பாதுகாப்புப் படைபிரிவினர் இருக்கும் இடம் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதை மீறி முகமது மோசின் செயல்பட்டுள்ளதால், அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்" எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், ஐஏஎஸ் அதிகாரி முகமது மோசின் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனை குறித்து மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தில் முறையிட்டார்.

ஐஏஎஸ் அதிகாரி முகமது மோசினின் கோரிக்கையை ஆய்வு செய்த தீர்ப்பாய நீதிபதி கே.பி. சுரேஷ் , தேர்தல் ஆணையம் விதித்திருந்த சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்தார். அவர் பிறப்பித்த உத்தரவில், " தேர்தல் ஆணையம் தேர்தல் பார்வையாளராக நியமித்திருந்த முகமது மோசினுக்கு விதித்த சஸ்பெண்ட் உத்தரவு பொருந்தாது. அது நிறுத்தி வைக்கப்படுகிறது. முகமது மோசின் தான் இதற்கு முன் பணியாற்றிய கர்நாடக அரசில் வழக்கம் போல் சேர்ந்து பணியாற்றலாம்.

பிரதமரின் சிறப்பு பாதுகாப்புப் படை(எஸ்பிஜி) அனைத்தையும் செய்வதற்குத் தகுதியானவர்கள் என்று கூற முடியாது. தேர்தல் ஆணைய அதிகாரிகள் கர்நாடக முதல்வர் ஹெச்.டி.குமாரசாமி, ஒடிசா முதல்வர் பட்நாயக் ஆகியோரின் வாகனங்களைக் கூட சோதனை செய்கிறார்கள்.

அதுமட்டுமல்லாமல் மனுதாரர் தான் சோதனையிடவில்லை. சோதனையிடும்போது வீடியோ எடுக்கப்படும்போது அங்கிருந்து தொலைவில் இருந்தேன் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், பிரதமர் மோடியின் ஹெலிகாப்டரில் இருந்து கறுப்பு நிறப் பெட்டி ஒன்று கொண்டு செல்லப்பட்டதாக ஏற்கெனவே கேள்விகள் எழுந்தன.  அதன் அடிப்படையில்தான் தேர்தல் பார்வையாளர் சோதனை செய்துள்ளார். ஆதலால், தேர்தல் ஆணையம் முகமது மோசினுக்கு விதித்த சஸ்பெண்ட் உத்தரவு நிறுத்தி வைக்கப்படுகிறது. முகமது மோசின் தனக்கு வழக்கமாக ஒதுக்கப்பட்டிருந்த கர்நாட மாநிலத்திலேயே பணியாற்றலாம்'' எனத் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதற்கிடையே முகமது மோசினுக்கு விதிக்கப்பட்ட சஸ்பெண்ட் உத்தரவை தேர்தல் ஆணையம் விலக்கிக் கொண்டது. அதுமட்டுமல்லாமல் தேர்தல் பார்வையாளர் முகமது மோசின், தனது கடமையில் இருந்து தவறி செயல்பட்டார் என்று கூறி, கர்நாடக மாநில அரசு அவர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கவும் தேர்தல் ஆணையம் பரிந்துரைத்துள்ளது.

SCROLL FOR NEXT