பாகிஸ்தானின் ராணுவப் பாடலை அச்சு அசல் காப்பியடித்து பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்ற இடங்களில் எல்லாம் இந்துஸ்தான் ஜிந்தாபாத் எனப் பாடி தனது சுயமான பாடல் எனக் கூறி வெளியிட்ட பாஜக எம்.எல்.ஏ., சர்ச்சையில் சிக்கியிருக்கிறார்.
தெலங்கானா மாநிலத்தின் கோசமஹால் தொகுதி பாஜக எம்.எல்.ஏ., தாக்கூர் ராஜா சிங் லோத். இவர், இந்திய ராணுவத்துக்காக தான் அர்ப்பணிக்கும் பாடல் என வெளியிட்டுள்ள பாடலைத்தான் தங்கள் ராணுவத்தின் பாடல் எனக் கூறியுள்ளது பாகிஸ்தான் ராணுவம்.
ஆனால், இது பாகிஸ்தானின் வழக்கமான குற்றசாட்டு என்று எடுத்துக் கொள்ள முடியாத அளவுக்கு ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டுள்ளது. பாடல் திருடப்பட்டத்தை அம்பலப்படுத்தியவரும் சாதாரண நபர் அல்ல.
ராம நவமியை ஒட்டி பாடலை வெளியிடுவதாக கூறிய எம்.எல்.ஏ., லோத், சொன்னபடி நேற்று 11.45 மணிக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் பாடலை வெளியிட்டார். ஆனால், பாகிஸ்தான் ராணுவம் கடந்த மார்ச் 23-ம் தேதி பாகிஸ்தான் தினத்தன்று இந்தப் பாடலை வெளியிட்டிருக்கிறது. பாடலை சாஹிர் அலி பாகா என்பவர் எழுதியிருக்கிறார்.
இதனைக் குறிப்பிட்டு ட்வீட் செய்துள்ள பாகிஸ்தான் ராணுவத் தளபதி மேஜர் ஆசில் காஃபூர், "நீங்கள் பாடலைக் காப்பி அடித்ததில் மகிழ்ச்சி. அதேபோல் உண்மை பேசுவதையும் காப்பி அடிக்கலாமே" எனக் கிண்டல் செய்தார்.
அவ்வளவுதான் நெட்டிசன்கள் பாஜக எம்.எல்.ஏ.,வை கிண்டல் செய்யத் தொடங்கியிருக்கின்றனர். இப்படி பாடலைத் திருடி வார்த்தைகளை மட்டுமே மாற்றிப் பாடுவதுதான் தேசபக்தியா எனக் கிண்டல் செய்துவருகின்றனர்.
குற்றச்சாட்டுக்கு மறுப்பு:
பாகிஸ்தான் பாடலைக் காப்பியடித்தமைக்காக நெட்டிசன்கள் கிண்டல் எல்லையில்லாமல் சென்று கொண்டிருக்க இது தொடர்பாக எம்.எல்.ஏ. ராஜா சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கமளித்திருக்கிறார்.
"பாகிஸ்தான் ராணுவத்தினர் நமது பாடலைக் காப்பியடித்திருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. பாகிஸ்தான் பாடர்களைக்கூட உற்பத்தி செய்கிறதா என்று வியப்படைய வைக்கிறது. அவர்கள் வேண்டுமானால் நம்மிடமிருந்து இந்தப் பாடலைக் காப்பியடித்திருக்கலாம். பாகிஸ்தான் போன்றதொரு தீவிரவாத நாட்டிடமிருந்து நாம் காப்பியடிக்க எதுவுமே இல்லை" எனக் கூறியிருக்கிறார்.