இந்தியா

சத்தீஸ்கரில் மேலும் ஒரு நக்சலைட் என்கவுன்ட்டர்: சிஆர்பிஎஃப் வீரர் பலி; ஒருவர் காயம்

செய்திப்பிரிவு

சத்தீஸ்கரில் இன்று (வெள்ளிக்கிழமை) நக்சலைட்டுகளுடன் ஏற்பட்ட என்கவுன்ட்டர் தாக்குதலில் சிஆர்பிஎஃப் வீரர் ஒருவர் பலியானார்; மற்றொரு வீரர் காயமடைந்தார்.

சிஆர்பிஎஃப்பின் 211 பட்டாலியன் மற்றும் மாவட்டப் படை ஆகியவை கூட்டாக இணைந்து நக்சலைட்டுகளுக்கு எதிராக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். கடந்த ஏப்ரல் 3-ம் தேதி 50 பட்டாலியன் படையினர் மற்றும் மாவட்டப் படையினர் 10 பேர் சேர்ந்து கல்லாரி மற்றும் பொராய் காவல் நிலையப் பகுதிகளில் தேடுதல் பணியைத் தொடங்கினர்.

இந்நிலையில் தம்தாரி மாவட்டத்தில் சமேதா கிராமத்தின் அருகில் உள்ள வனப்பகுதியில் இன்று  (வெள்ளிக்கிழமை) காலை தேடுதல் நடைபெற்றது. அங்கு மறைந்திருந்த நக்சலைட்டுகள் அப்போது திடீரெனத் தாக்குதல் நடத்தினர்.

இதில் தலைமைக் காவலர் ஹரிஷ் சந்த் பலியானார். சுதிர் குமார் என்னும் வீரர் காயமடைந்தார். சிஆர்பிஎஃப் வீரர்கள் பதில் தாக்குதல் நடத்தியதும் நக்சலைட்டுகள் சிதறியோடினர். காயமடைந்த வீரருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது

முன்னதாக, கான்கெர் மாவட்டத்தில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற நக்சல்களுடனான என்கவுன்ட்டரில் 4 பிஎஸ்எப் வீரர்கள் பலியானது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT