இந்தியா

பாலாகோட் தாக்குதலுக்குப் பிறகு ராகுலின் முகத்தில் ஆழ்ந்த சோகம்: அருணாச்சலப் பிரதேசத்தில் அமித் ஷா பேச்சு

ஏஎன்ஐ

இந்திய விமானப் படைகள் பாகிஸ்தான் தீவிரவாத முகாம்களை அழித்த பிறகு காங்கிரஸ் தலைவர் ராகுல் முகத்தில் ஆழ்ந்த சோகம் காணப்படுவதாக பாஜக தலைவர் அமித் ஷா பேசியுள்ளார்.

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அருணாச்சலப் பிரதேசத்தில் பாஜக தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது. அம்மாநிலத்தின் சாங்லாங் பகுதியில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா பேசியதாவது:

விமானத் தாக்குதல்களுக்குப் பிறகு, நாடெங்கிலும் மகிழ்ச்சி அலை ஒன்று உருவானது, பட்டாசுகள் வெடித்தன, இனிப்புகள் விநியோகிக்கப்பட்டன, உயிரிழந்த பாதுகாப்பு படையினரின் புகைப்படங்களுக்கு மாலை அணிவிக்கப்பட்டன, ஆனால் இரு இடங்களில் மட்டும் ஆழ்ந்த சோகங்கள் வெளிப்பட்டது. ஒருவர் பாகிஸ்தானில் இருந்தார், மற்றொருவர் யார் எனில் அது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.

ராகுல் காந்திக்கு ஒரு குரு இருக்கிறார். அவர் பெயர் சாம் பிட்ரோடா. அவர் கேட்கிறார், ஏன் தீவிரவாதிகளின்மீது குண்டுகள் போட வேண்டும், அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கவேண்டும் என்று.

நம் வீரர்களை கொல்பவர்களிடம் அங்கே போய் பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென்று சொல்கிறீர்கள், அவர்கள் கொல்லப்பட வேண்டும். அவர்கள் ஒரு துப்பாக்கிக் குண்டை வெடிக்கச்செய்தால் நாம் ஒரு வெடிகுண்டை அவர்கள் மீது வீச வேண்டும்.

மோடி அரசு, வடகிழக்கில் இருந்து போர்க்கொடி உயர்த்தியபிறகே இப்பிராந்தியத்தில் அமைதி உருவானது. மேலும் வளர்ச்சிக்ளை இங்கு கொண்டுவரமுடிந்தது.

கடந்த 50 ஆண்டுகளில் ஏழைகளுக்கு காங்கிரஸ் ஒன்றும் செய்யவில்லை. ஆனால் பாஜக அரசு கடந்த ஏழை விவசாயிகளின் வங்கிக் கணக்கின் மூலம் ரூ.6 ஆயிரம் வழங்கியுள்ளது.

வடகிழக்குப் பகுதிகளில் நிலவிய பயங்கரவாத அச்சுறுத்தலை பாஜக அரசு தூக்கியெறிந்தது. மேலும் அங்கு தற்போது அமைதியை உருவாக்கியுள்ளது. இப்பிராந்தியங்களில் வளர்ச்சியும் நிலைத்தன்மையும் உறுதிபடுததப்பட்டுள்ளது.

அந்த வகையில் அருணாச்சலப் பிரதேசத்திலேயே ஒரு எய்ம்ஸ் மருத்துவமனையை கொண்டுவர இருக்கிறோம். இனி அப்பகுதி மக்கள் சிகிச்சைக்காக டெல்லியோ கவுகாத்தியோ செல்ல வேண்டியதில்லை.

இவ்வாறு பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா பிரச்சாரக் கூட்டத்தில் பேசினார்.

SCROLL FOR NEXT