லேஸ் சிப்ஸ் உருளைக்கிழங்கு வகையைப் பயிர் செய்த விவகாரத்தில் 4 குஜராத் விவசாயிகள் மீது பெப்ஸி நிறுவனம் தொடந்துள்ள வழக்கில் விவசாயிகளுக்கு ஆதரவளிக்கப் போவதாக குஜராத் மாநில அரசு முடிவெடுத்துள்ளது.
லேஸ் சிப்ஸ் வெரைட்டி உருளைக்கிழங்கு விதைகளுக்கு அறிவுசார் சொத்துரிமை தங்கள் நிறுவனத்துக்கு இருப்பதால் அதைப் பயிர்செய்து விளைவிப்பதன் மூலம் நிறுவன உரிமைகளை விவசாயிகள் மீறிவிட்டதாகவும் இதற்கு நஷ்ட ஈடாக ரூ.4.2 கோடி அளிக்க வேண்டுமென்றும் பன்னாட்டு அமெரிக்க நிறுவனமான பெப்ஸி நிறுவனம் சார்பில் வழக்குத் தொடரப்பட்டது.
இது தொடர்பாக விவசாயிகள் மற்றும் பெப்ஸி நிறுவனம் ஆகியவற்றுக்கிடையேயான சட்டப் போராட்டத்தில் விவசாயிகள் பக்கம் நிற்கப்போவதாக குஜராத் மாநில அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அதிகாரி ஒருவர் கூறும்போது உயர்மட்டக் குழுக் கூட்டத்தில் விவசாயிகளுக்கு ஆதரவு தரும் முடிவு எட்டப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
குஜராத் விவசாயிகள் 1.21 லட்ச ஹெக்டேர்களில் 33 லட்சம் டன்கள் உருளைக்கிழங்குகளை உற்பத்தி செய்கின்றனர். சமீபத்தில் உ.பி.மாநில ஆக்ராவின் உருளை உற்பத்தியை விஞ்சி பனஸ்கந்தா உருளை உற்பத்தியில் இந்தியாவிலேயே சாதனை படைத்துள்ளது.
குஜராத்தின் மூத்த காங்கிரஸ் தலைவர் அகமது படேல், ‘இது ஒரு எச்சரிக்கை மணி’ என்று கூறியுள்ளார். பாஜவைச் சாடும் போது அவர், “கோர்ட்டுக்கு நம் விவசாயிகளை பன்னாட்டு நிறுவனம் இழுத்துள்ளது, இவர்கள் என்ன தூங்கிக் கொண்டிருந்தார்களா? மத்திய அரசு இதுவரை இந்த விஷயத்தில் எதுவும் கூறவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. இது நாடுமுழுதும் உள்ள் விவசாயிகளை உள்ளடக்கிய பெரிய விஷமாகும்” என்று கூறினார்.
மேலும் அவர், “சந்தை என்ன கேட்கிறதோ அதைத்தான் விவசாயிகள் உற்பத்தி செய்கின்றனர், இதில் நம் விவசாயிகள் என்ன விதைக்க வேண்டும் என்பதை அயல்நாட்டு நிறுவனம் உத்தரவிடுமா? காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் விவசாயிகளுக்கு தனி பட்ஜெட் அறிவித்துள்ளோம். கார்ப்பரேட்டுகளுக்கு நாங்கள் எதிரியல்ல ஆனால் விவசாயிகளின் நலன்களுக்கே முதல் முன்னுரிமை” என்றார்.
பாஜகவைச் சேர்ந்த பார்திய கிசான் சங்கம் இதில் தலையிடவும்தான் பாஜக அரசு இப்போது விவசாயிகளை ஆதரிக்கப் போவதாக அறிவித்துள்ளது.
புறக்கணிப்பு கோஷங்களினால் ‘செட்டில்மெண்ட்டுக்கு’ வந்த பெப்ஸி:
நாடு முழுதும் பெப்ஸி பொருட்களைப் புறக்கணிப்போம் என்று உலக அளவில் சமூகவலைத்தளங்களில் கோஷங்கள் முற்றுகையிட நீதிமன்றத்துக்கு வெளியே செட்டில் செய்து கொள்வதாக பெப்ஸி முன்வந்துள்ளது. இந்த வழக்கு ஜூன் 12ம் தேதி அகமாதாபாத் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
இந்த விவகாரத்தில் விவசாயிகளின் சட்டச் செலவுகளை மத்திய அரசு ஏற்க வேண்டும் என்று விவசாயிகள் தரப்பில் முன் வைக்கப்பட்டுள்ளது.