இந்தியா

தலைமை நீதிபதி மீது பாலியல் புகார்: சிபிஐ, உளவுத்துறை தலைவர், டெல்லி போலீஸ் ஆணையர் ஆஜராக உச்ச நீதிமன்றம் உத்தரவு

பிடிஐ

உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது கூறப்பட்ட பாலியல் புகாரில் மிகப்பெரிய சதி இருப்பதாக கூறப்பட்டது தொடர்பாக, சிபிஐ தலைவர், உளவுத்துறை தலைவர், டெல்லி போலீஸ் ஆணையர் ஆகியோர் இன்று நேரில் ஆஜராக உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

உச்ச நீதிமன்றத்தில் பணியாற்றிய முன்னாள் பெண் ஊழியர் ஒருவர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடந்ததாகக் கூறி தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது பாலியல் அத்துமீறல் புகார்களைத் தெரிவித்தார். இந்தப் புகார்களை உச்ச நீதிமன்றத்தில் உள்ள  22 நீதிபதிகளுக்கும், அந்தப் பெண் பிரமாணப் பத்திரமாக அனுப்பினார்.

இதைத் தொடர்ந்து அந்தப் புகார் சனிக்கிழமை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் அருண் மிஸ்ரா, சஞ்சீவ் கண்ணா ஆகியோர் தலைமையிலான அமர்வில்  விசாரிக்கப்பட்டது. ஆனால், நீதிபதிகள் உத்தரவு ஏதும் பிறப்பிக்கவில்லை.

இதற்கிடையே உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் உட்சவ் சிங் ஜெயின்ஸ் என்பவர் நீதிமன்றத்தில் நேற்றுமுன்தினம் பிரமாணப் பத்திரம் ஒன்றைத் தாக்கல் செய்தார்.

அதில் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயை சிக்கவைக்கவும், அவரை பதவி விலக வைக்கவும் சதி நடக்கிறது. என்னிடம் அஜெய் என்பவர் சமீபத்தில் அணுகி, தலைமை நீதிபதிக்கு எதிராக போலியாக பாலியல் புகாரைப் பதிவு செய்ய உதவ வேண்டும், பத்திரிகையாளர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கூறினார். அதற்காக என்னிடம் ரூ.1.50 கோடி பேரம் பேசப்பட்டது. ஆனால், அதற்கு நான் மறுத்துவிட்டேன் என்று தெரிவித்திருந்தார்.

அந்த மனு நீதிபதிகள் அருண் மிஸ்ரா தலைமையில் நீதிபதிகள் ரோஹின்டன் நாரிமன், தீபக் குப்தா ஆகிய சிறப்பு அமர்வு முன் விசாரணைக்கு இன்று காலை வந்தது. அப்போது நீதிபதி அருண் மிஸ்ரா பிறப்பித்த உத்தரவில், சிபிஐ தலைவர், உளவுத்துறை தலைவர், டெல்லி போலீஸ் ஆணையர் ஆகியோர் எங்களை தனிப்பட்ட முறையில் இன்று பிற்பகல் 3 மணிக்கு சந்திக்க வேண்டும்.

இது விசாரணை அல்ல. இந்த அதிகாரிகளிடம் தனிப்பட்ட முறையில் பேச வேண்டியுள்ளது. இந்த விவகாரத்தில் எந்த ஆதாரங்களையும் வெளியிட நாங்கள் விரும்பவில்லை. இந்த வழக்கு நாட்டின் தலைமை நீதிமன்றத்தின் நம்பகத்தன்மை, சுதந்திரம் தொடர்பானது எனக் கருதுகிறோம், மிகவும் சலசலப்பான சூழலை உருவாக்கி இருக்கிறது" எனத் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT