மக்களவைத் தேர்தலில் மக்களுக்கு விநியோகிப்பதற்காக, சப்பாத்திக்குள் மறைந்து ரூபாய் நோட்டை மறைத்து விநியோகம் செய்யும் முறையை வீடியோவாக ரூபா ஐபிஎஸ் வெளியிட்டுள்ளார்.
கடந்த 10-ம் தேதி மக்களவைத் தேர்தல் குறித்த அறிவிப்பை தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. அன்றைய தினமே தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்தன. மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 11-ம் தேதி முதல் மே 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. மே 23-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.
மக்களவைத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் கடந்த 20 நாட்களாக நாடு முழுவதும் ஆயிரக்கணக்கில் அதிகாரிகள் தலைமையில் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு வாகனங்கள் சோதனையிடப்பட்டு வருகினறன. தனியார் கார், பஸ், அரசுப் பேருந்துகள், விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், சோதனைச் சாவடிகள் ஆகியவற்றில் பறக்கும் படையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
பறக்கும் படைகள் மூலம் ரூ.600 கோடி மதிப்பிலான பணம், மது, இலவசப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இதில் தமிழகத்தில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட தொகை சுமார் ரூ.71 கோடி.
இந்நிலையில் பண விநியோகம் குறித்துத் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ரூபா ஐபிஎஸ், வாக்காளர்களைக் கவரப் பயன்படுத்தும் நூதன வழிகள் இவை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதை கவனிக்கவும் என்று பதிவிட்டுள்ளார். அதுதொடர்பான வீடியோவையும் தனது பதிவில் இணைத்துள்ளார்.
கர்நாடக சிறைத் துறையின் முதல் பெண் டிஐஜியான ரூபா ஐபிஎஸ், பரப்பன அக்ரஹார சிறை அதிகாரிகளுக்கு சசிகலா லஞ்சம் கொடுத்ததை அம்பலப்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.