இந்தியா

மதவாத சக்திகளை மக்கள் தோற்கடித்துவிட்டனர்: பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் கருத்து

பிடிஐ

இடைத்தேர்தலில் மதவாத சக்திகளை மக்கள் தோற்கடித்துவிட்டனர் என்று பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

சமாஜ்வாதி கருத்து

உத்தரப் பிரதேச முதல்வரும் சமாஜ்வாதி மூத்த தலைவருமான அகிலேஷ் யாதவ் கூறியதாவது:
சமூக ஒற்றுமையையும் சகோதரத்துவத்தையும்தான் மக்கள் விரும்புகின்றனர், அதனால்தான் மதவாத சக்திகளுக்கு அவர்கள் தக்க பதிலடி கொடுத்துள்ளனர். மக்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இனிவரும் காலங்களில் அதிக பொறுப்புணர்வுடன் செயல்படுவோம் என்று தெரிவித்தார்.

காங்கிரஸ் குற்றச்சாட்டு

காங்கிரஸ் மூத்த தலைவர் ஷகீல் அகமது கூறியதாவது:
பாஜகவின் போக்கு மற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியை மக்கள் விரும்பவில்லை. பிரதமர் மட்டும்தான் மவுனமாக இருக்கிறார். இதர பாஜக தலைவர்கள் பிரிவினையைத் தூண்டும் வகையில் தொடர்ந்து பேசி வருகின்றனர்.

குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களில் காங்கிரஸ் கணிசமான இடங்களைப் பெற்றுள்ளது. அடுத்து வரும் தேர்தல்களிலும் காங்கிரஸ் தனது பலத்தை நிரூபிக்கும். “லவ் ஜிகாத்” என்ற பெயரில் கணவன், மனைவிக்கு இடையேகூட மதவாத சக்திகள் பிரிவினையை ஏற்படுத்தி வருகின்றன என்று அவர் குற்றம் சாட்டினார்.

டி.ராஜா பேட்டி

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி. ராஜா கூறியதாவது:

பாஜகவையும் அதன் மதவாத கொள்கைகளையும் மக்கள் புறக்கணித்துள்ளனர். இந்த இடைத்தேர்தல் மதவாத சக்திகளுக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது. அடுத்து வரும் சட்டசபை தேர்தல்களிலும் இதேபோக்கு தொடரும் என்று கருதுகிறேன். உத்தரப்பிரதேசத்தில் பிரிவினையைத் தூண்ட பாஜக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. ஆனால் தேர்தல் முடிவுகள் அவர்களுக்கு சாதகமாக இல்லை.

மேற்கு வங்கத்தில் பாஜக ஓரிடத்தில் வெற்றி பெற்றிருப்பது குறித்து இடதுசாரி கட்சிகள் ஆய்வு செய்ய வேண்டியது அவசியம் என்று அவர் தெரிவித்தார்.

திரிணமூல் காங்கிரஸ்

திரிணமூல் காங்கிரஸ் மூத்த தலைவர் முகுல் ராய் கூறியபோது, நரேந்திர மோடி குறித்த மாயத்தோற்றம் மறைந்து வருகிறது. வரும் 2016-ம் ஆண்டு மேற்குவங்கத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு தொகுதிகளை கைப்பற்றுவோம் என்று தெரிவித்தார்.

பாஜக நம்பிக்கை

பாஜக மூத்த தலைவர் ஷாநவாஸ் ஹுசைன் கூறியதாவது:

இடைத்தேர்தலில் பல இடங்களில் நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம். சில இடங்களில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கவில்லை. உள்ளூர் பிரச்சினைகள், மாநில அரசுகளின் செயல்பாடுகளைக் கணித்தே இடைத்தேர்தல் முடிவுகள் அமைகின்றன. தோல்விகள் குறித்து ஆய்வு நடத்தப்படும்.

மேற்குவங்கத்தில் தாமரை மலர்ந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. வரும் மகாராஷ்டிரா, ஹரியாணா சட்டமன்றத் தேர்தல்களில் பாஜக அமோக வெற்றி பெறும் என்று அவர் நம்பிக்கையுடன் கூறினார்.

SCROLL FOR NEXT