சர்ச்சைக்குரிய வகையில் பேசியது தொடர்பாக, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா மீது தொடரப்பட்ட குற்றப்பத்திரிகையை உத்தரப் பிரதேச நீதிமன்றம் நிராகரித்துத் திருப்பி அனுப்பியுள்ளது.
உத்தரப் பிரதேசம் மாநிலம் முஸாபர்நகரில் நடைபெற்ற மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்ற அமித் ஷா, "நம்மை இழிவு படுத்தியவர்களை தேர்தலில் பழிவாங்க வேண்டும். பாடம் புகட்டு வதற்கு தேர்தல் நல்ல வாய்ப்பு" எனப் பேசியிருந்தார்.
சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாகவும், தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாகவும் கூறப்பட்ட புகாரின் அடிப்படையில், போலீஸார் கடந்த ஏப்ரல் மாதம் அமித் ஷா மீது வழக்கு பதிவு செய்தனர். இதைத் தொடர்ந்து அமித் ஷா உ.பி.யில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட தேர்தல் ஆணையம் தடை விதித்தது.
இது தொடர்பாக பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா மீது, இரு பிரிவினரிடையே மதம் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் பகைமையைத் தூண்டியது, திட்டமிட்டு பகைமையைத் தூண்டுவது, தவறான தகவலை பரப்பியது, வதந்திகளைப் பரப்புவது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் முஸாபர்நகர் காவல் துறை புதன்கிழமை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
இந்த குற்றங்கள் அனைத்தும் நிரூபிக்கப்பட்டால், பாஜக தலைவர் அமித் ஷாவுக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க சட்டத்தில் வாய்ப்பு உள்ளது.
இந்த நிலையில், இந்த குற்றப்பத்திரிகை மீது விசாரணையை மேற்கொண்ட மாஜிஸ்ட்ரேட் கூடுதல் தலைமை நீதிபதி, 'இம்மாதம் 13-ஆம் தேதி உத்தரப் பிரதேசத்தில் 11 சட்டப்பேரவை மற்றும் ஒரு நாடாளுமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடக்க உள்ளது. இந்த சமயத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படுவது தவறு. தேர்தல் நேரத்தில் மக்களை திசை திருப்பும் நடவடிக்கை' என்று கூறி, போலீஸார் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை நிராகரித்து திருப்பி அனுப்பினார்.
இதுகுறித்து உத்தரப் பிரதேச அரசை சாடிய மாநில பாஜக-வினர், அகிலேஷ் யாதவ் அரசு, உள்நோக்கத்துடன் பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு, பாஜக தலைவர் மீது பழிசுமத்தி ஜாமீனில் வெளிவர முடியாத அளவிற்கு சதி செய்ய நினைத்ததாக கூறயுள்ளனர்.
இதனிடையே, அமித் ஷா மீது தாக்கல் செய்த குற்றப்பதிவுகளை மறு ஆய்வு செய்து, இது தொடர்பான புதிய குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட உள்ளதாக உத்தரப் பிரதேச உள்துறை அமைச்சகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.